கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் செப்டம்பர் மாதத்தில் கல்லூரி தேர்வுகள் நடைபெறாது என்று முதலமைச்சர் மமதா பானர்ஜி கூறி உள்ளார்.

கொல்கத்தாவில் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில் நீட், ஜேஇஇ தேர்வுகளை திட்டமிட்டவாறு நடத்த வேண்டும் என்ற மத்திய அரசின் முடிவு ஏற்கத்தக்கதல்ல.

மேற்கு வங்கத்தில் செப்டம்பர் மாதத்தில் கல்லூரிகள் தேர்வுகள் நடைபெறாது. பல்கலைக் கழகத்தில் உள்ள கல்லூரிகளின் இறுதியாண்டு தேர்வுகள், வரும் அக்டோபர் இறுதிக்குள் நடத்தி முடிக்கும் சாத்தியக் கூறுகள் உள்ளதா என ஆராய மாநில கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

ஆன்லைன் தேர்வுகளையும் வரும் ஆயுத பூஜைக்குள் முடிக்க திட்டமிட்டு உள்ளோம். எந்தவொரு தேர்வுமுறைக்கும் எதிரானவர்கள் அல்ல. கொரோனா பரவி வருவதால், மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்காதீர்கள் என்றுதான் கூறுகிறோம்.

பல்கலைக்கழக இறுதி பருவ தேர்வுகளை செப்டம்பர் 30க்குள் நடத்த  உச்ச நீதி மன்றம் ஆணையிட்டு இருருந்தாலும், அதன் சாத்தியக்கூறுகள் குறித்து யுஜிசியிடம் முறையிடலாம் என தெரிவித்துள்ளது. ஆனால் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை நடத்தியே ஆகவேண்டும் என்று மத்திய அரசு பிடிவாதம் பிடிக்கிறது என்று கூறினார்.