டெல்லி: ஓ.பி.சி இடஒதுக்கீடு வழக்கில் பதிலளிக்க மத்திய அரசுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
மருத்துவப்படிப்பில் ஓபிசிக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு கோரி தமிழக அரசு, அதிமுக, திமுக, மதிமுக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இதையடுத்து உயர்நீதிமன்றத்தை நாடுமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. பின்னர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு இளநிலை மருத்துவப்படிப்பில் 15%, முதுநிலை மருத்துவ படிப்பில் 50% இடங்களை மாநில அரசுகள் வழங்குகின்றன. உச்சநீதிமன்றம் மட்டுமே முடிவெடுக்க முடியும் என்ற இந்திய மருத்துவ கவுன்சில் விளக்கத்தை ஏற்கமுடியாது.
எனவே இது குறித்து முடிவெடுக்க மாநில அரசு மற்றும் எம்.சி.ஐ. அடங்கிய குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டும். 3 மாதத்தில் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும், என்று உயர்நீதிமன்றம் கூறியது. இந் நிலையில், ஓ.பி.சி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்தக் கோரி உச்ச நீதி மன்றத்தில் அதிமுக மேல்முறையீடு செய்துள்ளது.
அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது: மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி பிரிவுக்கு 50% இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கால தாமதம் தேவையில்லாதது. 50% இடஒதுக்கீட்டை நடப்பாண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.