தமிழகத்தில் 2021ம்ஆண்டு மே மாதத்தில் சட்டமன்றத்தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, இந்த ஆண்டு இறுதியில், அதாவது டிசம்பர் மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும் என்றும் ஜனவரி மாதம் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
இதனால், தமிழக அரசியலிலும் தேர்தல் பணிகள் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளன. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன.
இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக அரசின் நடவடிக்கையை கூட்டணி கட்சியான பாஜக கடுமையான விமர்சித்து வருகிறது. அடுத்த தேர்தலில் பாஜக திமுக இடையேதான் போட்டி என்று பாஜக துணைத்தலைவர் அதிரடியாக கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், மாற்றுக்கட்சியைச் சேர்ந்த பிரபலங்களை தங்களது கட்சிக்கு இழுக்கும் பணியையும், பாஜக தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில், விஜயகாந்த் பிறந்தநாளன்று செய்தியாளர்களிடம் பேசிய கூட்டணி கட்சியான, தேமுதிக பொருளாளர், பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக தணித்து நிற்க வேண்டும் என தொண்டர்கள் விரும்புவதாக கூறினார். இதனால், அடுத்த தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி கேள்விக்குறியாகி உள்ளது.
இதுதொடர்பாக திருவாரூரில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தேர்தல் சமயத்தில்தான் கூட்டணி மற்றும் கூட்டணிக்கு தலைமை குறித்தும் முடிவு செய்யப்படும் என்றார்.
இந்த நிலையில், சென்னையில் செய்தியளார்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், தமிழக பாரதியஜனதா கட்சி, அதிமுக பாஜக கூட்டணியில் இடம்பெறும் என்றும், அதிமுகதான் கூட்டணி கட்சிக்கு தலைமை வகிக்கும், தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும் என கூறினார்.