மடியாசனம் – மழலையர்க் கவிதைகள்
தொகுப்பு 2
பா. தேவிமயில் குமார்
தாலாட்டு
ஆண்டவனுக்கு
அசதியாக
இருந்ததால்
குழந்தையைத்
தூங்க வைத்துத்
துணைக்கு அவனும்
தூங்குகிறான் !
கல் பெண்ணாக…….
காயப்படுத்தியக்
கல்லைக்
காலால் உதைத்தது
குழந்தை, சற்று
பயமாகத்தான்
பார்த்தேன்,
எங்கே கல்
எழுந்து விடுமோ ?
பெண் உருப்பெற்று ? என்று
வன்கொடுமை
விலங்குகளிடம்
விளையாடும்
பாப்பா,
பாதுகாப்பாகவே
இருக்கிறது !
சில மனித
மிருகங்களிடம்தான்
சித்ரவதைபடுகிறது !
வானவில்
வெள்ளை
வானவில்லுக்கு
வண்ணம்
தீட்டியது குழந்தை !
உபயம்,
சுண்ணாம்பு சுவர் !
வேடம்
மாறுவேடப் போட்டியில்
மாறி, மாறி
வேடங்களுடன்
வந்த குழந்தைகளுக்கு,
ஒரு சந்தேகம் !
எல்லா வேடமும்
இங்கிருக்கிறது !
ஆனால்……
ஏன் ???
குழந்தை வேடம்
யாரும் போடவில்லை ?? என
பிரம்மனே ……
படைப்புத்
தொழிலின் போது
தூங்கிவிட்டாயா ?
மாற்றுத்திறனாளி
மழலைகளைக்
காண்கையில்
கண்களில்
கரை புரள்கிறது !
கண்ணீர் ….
சிற்பி
மண் பூசி நின்ற
மழலையைப்
பார்த்துதான்
பூமியின் முதல்
சிற்பத்தினை
செதுக்கியிருப்பான்
முதல் சிற்பி !
இணைப்பு …..
குழந்தையை
பூமிக்கு அனுப்பிய
கடவுள்……
இலவச இணைப்பாகப்
பூக்களையும்
அனுப்பிவிட்டான் !
பயம்
மூன்று வயதில் தன்
முதல் பயத்தை
பதிவு செய்கிறது
பாப்பா…..
பள்ளிக்கூடத்தைப்
பார்த்து !
அதிகாரம்
தன் வாழ்நாள்
அதிகாரத்தை
அப்படியே
அள்ளிக்கொடுத்தான்
ஒரு ஆண்மகன்…….
ஒருத்தியிடம்….
ஆம்……
அன்று
அவனுக்குப்
பெண் குழந்தைப்
பிறந்த தினம் !