பெங்களூரு: மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து, மும்மொழி குறியீட்டுப் பலகைகளை நீக்க வேண்டுமென்றும், பதிலாக, கன்னடம் & ஆங்கிலம் ஆகிய 2 மொழிகள் இடம்பெற்ற பலகைகளை மட்டுமே வைக்க வேண்டுமெனவும், பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிட்(பிஎம்ஆர்சிஎல்) ஐ வலியுறுத்தியுள்ளது கன்னட மேம்பாட்டு ஆணையம்.
மேலும், ‘நம்ம மெட்ரோ’ நிறுவனத்தில் உள்ள அனைத்து ‘நீலக் காலர்’ பணிகளுக்கும்(குறிப்பாக சுத்தப்படுத்தல் மற்றும் பாதுகாப்புப் பிரிவுகள்) கன்னடர்களையே நியமிக்க வேண்டுமென்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
‘நம்ம மெட்ரோ’வில் கன்னட மொழியை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு இந்த நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
கன்னட மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் நாகபரணா, “மெட்ரோ ரயில் நிறுவனத்தில் கன்னடர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவது உறுதிசெய்யப்பட வேண்டும். ஏனெனில், தற்போதைய நிலையில், பாதுகாப்பு மற்றும் சுத்தப்படுத்தும் பணிகளில், அதிகளவில் வெளிமாநிலத்தவரே நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நமது மாநில மக்களுக்கு பணிக்கான தேவை இருக்கையில், அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டமா?” என்றார் அவர்.