கோவை: சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தால் போட்டியிடுவேன் என்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை கூறி உள்ளார்.
கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த தமிழகத்தை சேர்ந்த அண்ணாமலை பின்னர் தமது பதவியை ராஜினாமா செய்தார். சொந்த மாவட்டமான கரூரில் அமைப்பு ஒன்றை ஆரம்பித்து செயல்பட்டு வந்தார்.
நேற்றைய தினம் அவர் பாஜக தேசிய தலைவர் நட்டா முன்னிலையில் தம்மை பாஜகவில் இணைத்துக் கொண்டார். கட்சியில் இணைந்த பின்னர் தமிழகத்தில் முதல் முறையாக அவர் கோவை மாவட்ட பாஜக அலுவலகத்திற்கு இன்று வந்தார்.
அப்போது அவர் பேசியதாவது: தொண்டன், தலைவன் என்பதற்கு பாஜகவில் பெரிய வித்தியாசம் இல்லை. ஒவ்வொரு தொண்டனும் பல போராட்டங்களை சந்தித்தவர்கள்.
தமிழகம் புண்ணிய பூமி, ஆனால் 52 ஆண்டுகளாக கடவுள் இல்லை என்று கூறிய கூட்டத்தால் மாற்றுப்பாதையில் சென்றது. இதை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது முதல் வேலை. பல மாநிலங்களில் பாஜக இன்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.
அதேபோல் தமிழகத்திலும் பாஜக ஆட்சி வரும். சட்டசபை தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய கட்சியாக உருவெடுக்கும். சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தந்தால் போட்டிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.