டெல்லி: கொரோனா காரணமாக நீட், ஜெஇஇ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ள நிலையில், மற்றொருபுறம், தேர்வுகளை நடத்தவேண்டும் என வலியுறுத்தி முக்கிய கல்வி நிறுவனங்களின் கல்வியாளர்கள் பிரதருக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
கொரோனா காரணமாக, கல்வி நிறுவனங்கள் கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டுள்ள நிலையில், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு தள்ளி வைக்கப்பட்டு, அடுத்த மாதம் (செட்படம்பரில்) நடைபெற உள்ளது. இதற்கான அட்மிட் கார்டும் வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், தமிழகம் உள்பட காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்கள் உள்பட பல மாநிலங்கள் நீட், ஜெஇஇதேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. மேலும் 7 மாநிலங்கள் சார்பில் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு எதிராகவும், மத்தியஅரசுக்கு ஆதரவாகவும், டெல்லி பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், கேரள மத்திய பல்கலைக்கழகம், கலிபோர்னியா பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு முக்கிய கல்வி நிறுவனகளைச் சேர்ந்த கல்வியாளர்கள் 100 பேர் சேர்ந்து, ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகளை திட்டமிட்டபடி நடத்த வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
“கல்வி சகோதரத்துவத்தின் உறுப்பினர்களான நாங்கள் ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகளை நடத்து வதற்கான அரசாங்க முடிவை முழுமையாக ஆதரிக்கிறோம்” என்று அவர்கள் எழுதியுள்ள அந்த கடிதத்தில், “எங்கள் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் கனவுகளையும் எதிர்காலத்தையும் எதற்காகவும் சமரசம் செய்ய முடியாது. இருப்பினும், சிலர் தங்கள் சொந்த அரசியல் நிகழ்ச்சி நிரலைத் தூண்டுவதற்கும் அரசாங்கத்தை எதிர்ப்பதற்கும் நமது மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாட முயற்சிக்கின்றனர், என விமர்சித்துள்ளனர்.
“உங்கள் திறமையான தலைமையின் கீழ், மாணவர்களின் எதிர்காலம் கவனிக்கப்படுவதையும், 2020-21 ஆம் ஆண்டிற்கான கல்வி நாட்காட்டி வடிவமைக்கப்படுவதையும் உறுதி செய்வதற்காக முழு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகளை மத்திய அரசு வெற்றிகரமாக நடத்தும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்று தெரிவித்து உள்ளார்.
ஒருபக்கம் ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகள் வேண்டாம் என அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறி வரும் நிலையில், மற்றொருபுறம் கல்வியாளர்கள், ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகளை திட்டமிட்டபடி நடத்த வேண்டும் என போர்க்கொடி தூக்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.