மும்பை நகரின் இதயம் என்று வர்ணிக்கப்படும் பிரதான இடத்தில் ’ஷாகன் ரெஸ்டாரண்ட்’ என்ற ஓட்டல் உள்ளது.
மத்திய ரயில் நிலையமும், பேருந்து நிலையமும் அருகாமையில் இருப்பதால், இந்த ஓட்டலில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும். இவர்கள் சொன்னது தான் விலை.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஜீன் மாதம் 8 ஆம் தேதி இந்த ஓட்டலுக்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் என்பவர் , ‘குடும்ப பேக்’ ஐஸ்கிரீம் வாங்கியுள்ளார். ஐஸ்கிரீம் விலை 165 ரூபாய் என அச்சடிக்கப்பட் டுள்ள நிலையில், பாஸ்கரிடம் 175 ரூபாய் வசூலித்துள்ளது, ஓட்டல் நிர்வாகம்,

மற்ற ஆட்கள் என்றால் சும்மா விட்டு விடுவார்கள்.  சப். இன்ஸ்பெக்டர் ஆயிற்றே? விடவில்லை.
ஓட்டல் நிர்வாகத்திடம் ‘நியாயம்’’ கேட்டுள்ளார்.

அவர்கள் சரியாக பதில் சொல்லவில்லை. ஆத்திரம் அடைந்த சப்- இன்ஸ்பெக்டர் பாஸ்கர், தென் மும்பை மாவட்ட நுகர்வோர் குறை தீர்க்கும் மையத்தில் முறையிட்டார்.

கடந்த 6 ஆண்டுகளாக நடந்த வழக்கில் இப்போது தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. என்ன தீர்ப்பு?புகார் அளித்த பாஸ்கருக்கு, கூடுதலாக வசூலித்த பணத்துடன் ( 10 ரூபாய்) அவருக்கு இழப்பீடாக 15 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

அது மட்டுமல்ல. ‘’ கடந்த 24 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் அந்த ஓட்டல் தினமும் 50 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டுகிறது. MRP- விலையை விட கூடுதலாக வசூலித்து நல்ல லாபம் பார்த்திருக்கும். முகம் தெரியாத வாடிக்கையாளர்களிடம், ‘’கொள்ளை லாபம்’ அடித்த இந்த ஓட்டல் நுகர்வோர் நல நிதிக்கு 2 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்’’ என்றும் அரிதினும் அரிதான தீர்ப்பை அளித்துள்ளது, மும்பை நுகர்வோர் மையம்.

-பா.பாரதி.