சென்னை: மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்து வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கடலூர், நாகை மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். ஏற்கனவே 15க்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு சென்று மாவட்ட வளர்ச்சிப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்துள்ளார்.
இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கடலூர் மற்றும் நாகை மாவட்டங் களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இன்று காலை கடலூருக்கு செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அப்போது, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், முடிவுற்ற திட்டப்பணிகளையும் தொடங்கிவைக்கிறார். தொடர்ந்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் வழங்குகிறார்.
பின்னர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு திட்டங்களின் வளர்ச்சிப் பணிகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் கூட்ட மைப்பினர், விவசாய சங்க பிரதிநிதிகள், மகளிர் சுயவுதவிக் குழுவினர் உள்ளிட்டோருடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்கிறார்.
கடலூரில் இன்று 22 புதிய திட்டப்பணிகளை, 32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டுகிறார். 25 கோடி ரூபாய் மதிப்பில் முடிவுற்ற 33 திட்டப் பணிகளை துவக்கி வைக்கிறார்.
அதையடுத்து இன்று மதியம் நாகப்பட்டின மாவட்டத்திலும் முதலமைச்சர் பழனிச்சாமி, மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
இதனைத் தொடர்ந்து வருகின்ற 28ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் நேரில் ஆய்வு மேற்கொள்கிறார். அன்று மதியம் தஞ்சாவூர் மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்தும் கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்கிறார்.