ஆகஸ்டு 26ந்தேதி – இன்று அன்னை தெரசா பிறந்தநாள்…

கட்டுரையாளர்: ஆர்.நூருல்லா 

அன்னை தெரசா 1910-ஆம் ஆண்டு இதே நாளில் (ஆகஸ்ட் 26)பிறந்தார்.
அவருடன் நான் சுற்றுப் பயணம் நிகழ்த்திய அன்றைய நாளை…இன்றைய நாளில் அசைபோட்டுப் பார்க்கிறேன்.


அன்னை தெரசா சென்னை வந்தார். அவர் குடிசைப் பகுதிகளில் சுற்றுப்பயணம் நிகழ்த்தத் திட்டமிட்டிருந்தார். எனவே அப்போதைய குடிசை மாற்று வாரியத் தலைவர் சுலோச்சனா சம்பத்தைத் தமிழக அரசு ஏற்பாடு செய்து அழைத்துச் செல்ல வழிவகை அமைத்துக் கொடுத்தது.

அதன்படி சென்னையில் அன்னை தெரசாவை முன்நின்று ஏற்றுக்கொண்ட சுலோச்சனா சம்பத், ஒரு நாள் முழுக்கச் சுற்றுப் பயண நிகழ்ச்சிகளில் ஒருங்கிணைந்திருந்தார்.
ஈவிகே சம்பத் காலத்திலிருந்தே அவரது இல்லத்திற்குச் சென்று வந்த வகையில் சுலோச்சனா சம்பத் அம்மையாரோடு எனக்கு நெருக்கமான நேசம் நீடித்து வந்தது.

அவர் குடிசை மாற்று வாரியத் தலைவராக இருந்தபோதும் அது தொடர்ந்தது. அந்த காலத்தில் அவர் கேகே நகரில் உள்ள ராணி அண்ணா நகர் பகுதியில் குடிசை மாற்று வாரியக் கட்டிடத் தொகுப்புத் திட்டத்தை உருவாக்கினார். அப்போது நான் அவரிடம் ஒரு வேண்டுகோள் வைத்தேன்.
“சென்னையிலுள்ள நிருபர்கள் பற்றாக்குறை வருமானத்தை வைத்துக்கொண்டு, வீட்டு வாடகைக் கட்ட வழியில்லாமல் வதை படுகின்றனர்” என்று உருக்கமாகக் குறிப்பிட்டேன்.
அவர், “என்ன வேண்டும்?’ என்று கேட்டார்.


“ராணி அண்ணா நகர் பகுதியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வாரியக் கட்டிடத் தொகுப்பின் ஒரு கட்டிடத்தைச் செய்தியாளர்களுக்கென ஒதுக்கிக் தர வேண்டும். அதில் உள்ள அனைத்து வீடுகளிலும் நிருபர்களே வசித்தால் அது முன்னுதாரணம் மிக்கக் குடியிருப்பாக அமையும்” என கேட்டுக் கொண்டேன்.

அவரும் மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டார்.அதற்கான பயனீட்டாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதற்கிடையே முதல்வரிடமும் அனுமதி பெறப்பட்டது.
இதனால் தகவல் கோட்டைச் செய்திக் கள நிருபர்களுக்குத் தெரிந்துவிட்டது. அந்தப் பட்டியல் சுலோசனா சம்பத்திடம் ஒப்படைக்கபட இருந்தபோது இந்த பட்டியல் தலைமைச் செயலகத்தில் இருந்த நிருபர்களின் பார்வைக்குச் சென்றுவிட்டது.

எனவே அந்தப் பட்டியல் சுலோச்சனா சம்பத்திடம் ஒப்படைக்கப்பட்டபோது பட்டியலில் இருந்து என் பெயர் எப்படியோ அகற்றப்பட்டு விட்டது. செய்தியாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த அந்த கட்டிடத்திற்குள் எனக்குக் கிடைக்க இருந்த வாய்ப்பு தடுக்கப்பட்டுவிட்டது.
இப்போதும் அந்த கட்டிடம் உண்டு. செய்தியாளர்களும் இருக்கிறார்கள். ஆனால் நானோ அந்த உரிமையைப் பெற முடியாமல் போயிற்று.

என் பெயர் நீக்கப்படக் காரணமானவர் மறைவெய்தியபோது அனைத்து இறுதிக் காரியங்களையும் மகன் போலிருந்துச் செய்தேன். அவருக்கு ஆண் வாரிசு கிடையாது.
சுலோச்சனா சம்பத்துடனான என் பாசபூர்வமானப் பற்றுப் பக்குவமாகப் பராமரிக்கப்பட்டு வந்தது. அதன் ஒரு கட்டமாகத் தான் சுலோச்சனா சம்பத் அழைப்பு விடுத்தார். நான் நேரில் சென்று பேசினேன். “அன்னை தெரசாவின் சென்னைப் பயணத்தின் பொறுப்பாளர் பொறுப்பைத் தமிழக முதல்வர் எனக்கு வழங்கி இருக்கிறார்.” என்று என்னிடம் தெரிவித்தார்.

அன்னை தெரசாவுடன் அவர் பயணிக்கும் போது நானும் செய்தியாளனாகப் பங்கேற்க அனுமதி வேண்டினேன். வாய்ப்பை அவர் மனப்பூர்வமாக வழங்கிப் பெருமைச் சேர்த்தார்.
ஆசிரியரிடம் இதைப் பற்றிக் குறிப்பிட்டேன். அவர் உவகையுணர்வோடு அனுமதித்து, புகைப்படக் கலைஞரையும் உடன் அனுப்பி வைத்தார்.

அதன்படி, அன்னை தெரசாவுடன் சுலோச்சனா சம்பத் நிகழ்ச்சிகளில் அடியேனும் பங்கேற்றேன். மந்தைவெளிபாக்கம் பகுதியில்  பஸ் நிலையத்தில் இருந்து பட்டினப் பாக்கம் போகும் சாலையில் உள்ள குடிசைப் பகுதிக்குச் செல்வது எனத் திட்டமிடப்பட்டது. அன்னை தெரசாவின் சேவா நிறுவனத்துச் சென்னைக் கிளைப் பொறுப்பாளர்களுடன் கலந்து பேசித்தான் அன்னை தெரசாவின் சுற்றுப்பயணம் நிகழ்ச்சிகள் தீர்மானிக்கப்பட்டன. குடிசைப் பகுதிக்குள் சென்று அங்கிருந்த ஏழை எளியோரின் குடிசைகளுக்குள் அன்னை தெரசா நுழைந்தார். வியாதியில் கிடந்தக் குழந்தைகளை யும், நொடிந்து போன நோஞ்சான் பிள்ளைகளையும் அவர் மடியில் தூக்கி வைத்துக் கொண்டுக் கேசத்தைக் கோதிப் பாசத்தைப் பொழிந்தார். அருகில் இருந்தோர் கன்னத்தில் வழிந்த கண்ணீரோடு அன்னையை வணங்கினர்.

அதன் பின்னர் தி நகரில் தெற்கு போக் ரோடு பகுதியில் வெங்கட் நாராயணா சாலைச் சந்திப்பு அருகே அமுதம் காலனிக்குச் சென்றோம். ஒரு சிறு அறை தான். அன்னை தெரசாவின் சேவை அமைப்பின் ஒரு கிளை அலுவலகம் அதில் இருந்தது.
அமர்ந்து அன்னை தெரசா ஜெபம் செய்தார். அமைப்பின் பொறுப்பாளர்களுடன் உரையாடினார். அந்தக் குடியிருப்பில் இருந்த பொதுமக்களிடையே நேசம் பேசினார்.அப்போது அடியேன் நெற்றியில் தன் அருட்கரத்தைப் பதித்து ஆசீர்வாதம் செய்தார்.
– இவ்வாறாக வெவ்வேறு இடங்களுக்குப் பயணம் சென்ற நிலையில் அவருடன் சுலோச்சனா சம்பத்தும் அடியேனும் உடன் சென்றோம். இன்றும் நினைத்துப் பார்க்கிறேன். அந்த காலகட்டத்தில் அன்னை தெரசாவுடன் சுற்றுப் பயணம் நிகழ்த்திய அந்த நினைவுகள் நெஞ்சில் பசுமையாக இருக்கின்றன. மனம் விம்மித் தாழ்கிறது. நெற்றி நிமிர்கிறது.


புனிதர் பட்டம் பெற்ற…நோபல் விருது ஏற்ற அன்னை தெரசாவுடன் சுலோசனா சம்பத் மற்றும் நூருல்லா.