’’வந்தவர் எல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் நமக்கு இடம் இல்லை’’ என்ற பாடல் மனிதனை குறித்து பாடப்பெற்றாலும், அதனை ஜடப்பொருள்களுக்கு பயன் படுத்திக்கொள்வதில் தப்பில்லை.
இங்கே குறிப்பிடப்போகும், ஜடப்பொருள். ‘விராத்’.

இந்திய கடற்படைக்கு சொந்தமான விமானம் தாங்கி கப்பலான ‘விராத்’ உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து விட்டது. .
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே ஓய்வு அளிக்கப்பட்ட அந்த கப்பல், இன்னும் கொஞ்ச நாட்களில் சிறு சிறு பாகங்களாக சிதற போகிறது.
ஏன்?
’வயதாகி விட்டதால்’ முன்பு போல் விராத் கப்பலால் செயல்பட முடியாது.
’இந்த கப்பலை உடைக்க உள்ளோம்’’ என கடந்த ஆண்டு ஜுலை மாதமே நாடாளுமன்றத்தில் மத்திய அரசாங்கம் அறிவித்து விட்டது.

இதனால் பல தரப்பினருக்கும் அதிர்ச்சி.

ஆந்திர அரசும், மகாராஷ்டிர அரசும் அந்த கப்பலை, தாங்களே வாங்கி ‘மியூசியமாக’’ மாற்றும் முயற்சியில் இறங்கின.

முயற்சி கை கூட வில்லை. இப்போது அந்த கப்பல் மும்பையில் உள்ள கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அதனை பராமரிக்க ஏகப்பட்ட செலவுகள் ஏற்படுகிறது.

மின்சாரம், தண்ணீர், பழுது நீக்குதல் என இந்த கப்பல், கடற்படைக்கு செலவு வைத்ததுடன், விசாலமான இடத்தை ’’ஆக்ரமித்து’’, நெரிசல் மிகுந்த கடற்படை தளத்துக்கு ‘சுமை’’ யாகவும் இருந்து வருகிறது.

இதனால், அந்த கப்பல் ஏலம் விடப்பட்டது.  குஜராத் நிறுவனம் ஒன்று 38 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்துள்ளது.

’டெலிவரி ஆர்டர்’ கிடைத்ததும், மும்பையில் இருந்து குஜராத்தில் உள்ள ஆலாங் என்ற இடத்துக்கு ‘’ DISMANTLING’’ செய்வதற்காக, விராத் கொண்டு செல்லப்படும்.

அந்த இடம், கப்பல் உடைக்கும் தளமாகும்.

விதி முடிந்த விராத், அந்த தளத்தில் தனது அங்கங்களை இழந்து, வேறு உருவில், வேறு பெயரில் நம்மிடம் உலா வரக்கூடும்.

-பா.பாரதி