டெல்லி: நீட், ஜே.இ.இ. தேர்வுகளை தீபாவளி வரை ஒத்தி வைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு பாஜக எம்பி சுப்ரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேர அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வான நீட் நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கடந்த 4 ஆண்டுகளாக நீட் தேர்வு நடைபெற்று வருகிறது.
கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நீட் தேர்வுகள் செப்டம்பர் 13ம் தேதி நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜே.இ.இ. முதன்மை தேர்வும் செப்டம்பர் 1ம் தேதி தொடங்கி 6ம் தேதி வரை நடக்கிறது. இந்த தேர்வுகளை ஒத்தி வைக்க கோரிய மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.
இந் நிலையில், நீட், ஜே.இ.இ. தேர்வுகளை தீபாவளி வரை ஒத்தி வைக்க வேண்டும் பாஜக எம்.பி. சுப்ரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:
நீட், ஜே.இ.இ தேர்வுகளை நடத்தும் கட்டமைப்பு வசதிகள் தற்போது உள்ள சூழ்நிலையில் நாடு இப்போது இல்லை. பொதுப்போக்குவரத்து தொடங்காத நிலையில் மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு வந்து செல்வது சிரமம்.
நாடு முழுவதும் பல மாணவர்களின் தற்கொலைக்கு மத்திய அரசின் முடிவு வழி வகுக்கும். எனவே, நீட், ஜே.இ.இ. தேர்வுகளை தீபாவளி பண்டிகை வரை ஒத்தி வைக்க வேண்டும், மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு பிரதமர் மோடி அறிவுறுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.