புதுடெல்லி: இந்தியாவில் வேளாண் பொருள் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக, வேளாண்மை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மார்ச் தொடங்கி ஜுன் வரையிலான காலக்கட்டத்தில் 23.24% அளவிற்கு வேளாண் பொருட்கள் ஏற்றுமதி அதிகரித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
வேளாண் அமைச்சகம் மேலும் கூறுவதாவது; உலக கோதுமை உற்பத்தியில், இந்தியா இரண்டாவது இடத்தை வகிக்கிறது. ஆனால், ஏற்றுமதியில், 34வது இடத்தில் இருக்கிறது. இதேபோல், காய்கறி உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் இருந்தபோதும், ஏற்றுமதி என்று வரும்போது 14வது இடத்திலேயே இருக்கிறோம்.
பழங்களைப் பொறுத்தவரையும் அதே நிலைதான். உற்பத்தியில் இரண்டாவது இடத்தில்; ஆனால், ஏற்றுமதியிலோ 23வது இடம். வளைகுடா நாடுகளில் ஏற்றுமதி அதிகரிக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது, இந்தியாவுக்கான வலுவான சந்தையாகும். தற்போது, இந்நாடுகளுக்கு, நாட்டின் மொத்த ஏற்றுமதியில், 10% முதல் 12% அளவுக்கே ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
ஏற்றுமதியை அதிகரிக்கும் பொருட்டு, பொருட்களின் மதிப்புக்கூட்டல் மற்றும் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கான மாற்று ஆகியவற்றில் கவனம் செலுத்தும் செயல் திட்டங்கள் வலியுறுத்தப்பட்டு வருகின்றன என்று கூறப்பட்டுள்ளது.