பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட, சசிகலா, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் சிறை வாழ்க்கை முடிந்து, வரும் 28ந்தேதி (ஆகஸ்டு 28) விடுதலைகிறார் என்று டெல்லி மூத்த பத்திரிகையாளர் ஒருவர் தகவல் தெரிவித்து உள்ளார்.
இதற்கிடையில் சமீபத்தில், கர்நாடக உள்துறை செயலாளராக ஐபிஎஸ் அதிகாரி ரூபா நியமனம் செய்யப்பட்டு உள்ள நிலையில், சசிகலா முன்கூட்டியே சிறையில் இருந்து விடுதலையாவாரா என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவிப்பு தொடர்பான வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந்தேதி பெங்களூர் பரப்பன அக்ரஹாரம் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். அவர்களின் சிறைவாசம் 2021ம்ஆண்டு பிப்ரவரி மாதம் முடிவடையும் நிலையில், பல்வேறு விடுமுறை, நன்னடத்தை போன்றவை காரணமாக, சில மாதங்களுக்கு முன்பே அவர் விடுதலை செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
இதற்கிடையில், சசிகலாவின் ரிலீஸ் எப்போது என்று ஆர்டிஐ மூலம் கடந்த ஜூன் மாதம் சமூக ஆர்வலர் கேட்ட கேள்விக்கு சிறைத்துறை நிர்வாகம் மழுப்பலாக பதிலளித்துள்ளது.
இந்த நிலையில்தான், கடந்த மாதம் உள்துறை செயலாளராக முன்னாள் கர்நாடக சிறைத்துறை அதிகாரியாக இருந்த ரூபாய ஐபிஎஸ் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர்தான், சசிகலா சிறையில் இருந்து வெளியே சுற்றியதை கண்டுபிடித்த நிலையில், சசிகலாவின் விதிகள் மீறி செயல்களை குறித்த வீடியோ வெளியிட்டு அதிரடி நடவடிக்கையும் எடுத்தார். இது தொடர்பான தனி வழக்கும் நிலுவையில்உள்ளது.
இந்த நிலையில், சமீபத்தில், கர்நாடக பாஜக நிர்வாகியான ஆசீர்வாதம் ஆச்சாரி என்பவர் சசிகலா ஆகஸ்டு 14ந்தேதி விடுதலை செய்யப்படுவார் என டிவிட் போட்டிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. சுதந்திர தினத்தை முன்னிட்டு, சசிகலா விடுதலையாவார் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.
ஆனால், சிறைத்துறை அதிகாரிகளோ, , சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக எந்த பரிசீலனையும் இல்லை என தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், ஆகஸ்டு 28-ல் வி.கே.சசிகலா விடுதலையாகிறார் என டெல்லி மூத்தப் பத்திரிக்கையாளர் ராஜகோபாலன் தெரிவித்து உள்ளார். அவரது தகவல் உண்மையாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அன்றைய தினம் விடுதலை செய்யப்படவில்லை என்றால், காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2ந்தேதி சசிகலா விடுதலையாவார் என்றும் நம்பப்படுகிறது.
ஆனால், உள்துறை செயலாளர், ரூபா சசிகலாவை விடுதலை செய்ய அனுமதிப்பாரா அல்லது, சிறையை விதிகளை மீறி வெளியே சென்ற வழக்கு காரணமாக கொண்டு, அவரது சிறையை வாழ்க்கையை மேலும் அதிகரிப்பாரா என்பது விரைவில் தெரிய வரும்.