டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் செப்டம்பர் 1ந்தேதி தொடங்கும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா தொற்று காரணமாக 1ந்தேதி முதல் 8ந்தேதி வரை 8 நாட்கள் மட்டுமே கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டு இருப்பதாக தலைநகர் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கி நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல், பொதுமுடக்கம் காரணமாக, மழைக்காலக் கூட்டத்தொடர் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, காணொளி காட்சி மூலம், நாடாளுமன்றக் குழு கூட்டங்களை நடத்துவது குறித்து, கடந்த மே மாதம் 7ந்தேதி லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா, ராஜ்யசபா தலைவர் வெங்கையாநாயுடு ஆகியோர் ஆலோசனை நடத்தினர். அப்போது முடிவு ஏதும் எடுக்க முடியாத நிலையில், தற்போது சமீபத்தில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவும் ஆலோசனை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து, மழைக்கால கூட்டத்தொடரை நடத்தும் வகையில், நாடாளுமன்ற இரு அவைகளிலும் சமூக இடைவெளியை பின்பற்றி இருக்கைகளை மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. மேலும், உறுப்பினர்களுக்கு அவை அலுவல்கள் தெரியும் வகையில் 4 பெரிய திரைகளும் 6 சிறிய திரைகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் செப்டம்பர் ஒன்றாம் தேதி துவங்கும் என்றும், 7 முதல் 8 நாட்கள் நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த கூட்டத்தொடரில் 11 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.