பெய்ஜிங்: நாட்டின் முதல் கோவிட் தடுப்பூசிக்கான காப்புரிமையை சீனா, கான்சினோ பயோலாஜிக்ஸ் என்ற நிறுவனத்துக்கு வழங்குகிறது.

கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பரிசோதனை முயற்சியில் மற்ற நாடுகளை போல சீனாவும் மும்முரமாக ஈடுபட்டு உள்ளது. சீனாவின் ராணுவ மருத்துவ அறிவியல் அகாடமி விஞ்ஞானிகள் மனிதர்களுக்கு தடுப்பு மருந்தைச் செலுத்தி தடுப்பூசியைக் கண்டறிய ஒப்புதல் பெற்றுள்ளனர். ராணுவ மருத்துவ அறிவியல் அகாடமி மற்றும் ஹாங்காங்கைச் சேர்ந்த கான்சினோ பயோலாஜிக்ஸ் நிறுவனம் இணைந்து இந்த ஆராய்ச்சியை நடத்தி வருகின்றன.

இந் நிலையில், நாட்டின் முதல் கோவிட் தடுப்பூசிக்கான காப்புரிமையை சீனா, கான்சினோ பயோலாஜிக்ஸ் என்ற நிறுவனத்துக்கு வழங்குகிறது. கான்சினோ பயோலாஜிக்ஸ் நிறுவனமானது கோவிட் 19 தடுப்பூசிக்கு பெய்ஜிங்கிலிருந்து காப்புரிமை ஒப்புதலை பெற்றுள்ளது என்று நாட்டின் அறிவுசார் சொத்து ஒழுங்குமுறையாளரின் ஆவணங்களை மேற்கோளிட்டு மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது சீனா வழங்கிய முதல் COVID-19 தடுப்பூசி காப்புரிமையாகும் என்று அரசுக்கு சொந்தமான பீப்பிள்ஸ் டெய்லி செய்தித்தாள் வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 11 ம் தேதி காப்புரிமை வழங்கப்பட்டதாகக் கூறி சீனாவின் தேசிய அறிவுசார் சொத்து நிர்வாகம் வெளியிட்ட ஆவணங்களை மேற்கோள் காட்டி அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாதம் கான்சினோ தடுப்பூசிக்கான 3ம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை தொடங்க திட்டமிட்டுள்ளதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. அந்த நாடுகளில் 3ம் கட்ட சோதனைகளை தொடங்க ரஷ்யா, பிரேசில் மற்றும் சிலி ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கான்சினோ தெரிவித்துள்ளது.

இதையடுத்து, திங்கள்கிழமை காலை கான்சினோவின் ஹாங்காங் பங்குகள் சுமார் 14 சதவீதம் உயர்ந்தன. அதன் ஷாங்காய் பங்குகள் மதியம் வரை 6.6 சதவீதம் உயர்ந்தன.