சேலம்:  மேட்டூர் அணையிலிருந்து  கிழக்கு, மேற்கு  பாசனத்துக்காக இன்று காலை தண்ணீர் திறக்கப்பட்டது.   அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தண்ணீர் திறந்து வைத்தனர்.

மேட்டூர்அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம். அதன்படி, பாசனத்துக்காக கடந்த  ஜூன்  மாதம் 12ம் தேதி  மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தண்ணீர் திறந்துவிட்டார்.

இந்த நிலையில், தற்போது,  கிழக்கு, மேற்கு கால்வாய் மூலம் ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள 45,000 ஏக்கர் நிலங்கள் பயனடைவதற்காக தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி உத்தரவிட்ட நிலையில், இன்று  தண்ணீர் திறக்கப்படும் பணி இன்று நடைபெற்றது.

இன்று காலை 9.45 மணியளவில்  அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கே.சி. கருப்பணன், சரோஜா ,மாநிலங்களவை உறுப்பினர் சந்திர சேகரன், சட்டமன்ற உறுப்பினர் செம்மலை  மற்றும், மாவட்ட ஆட்சியர் ராமன், பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளர் ஜெயகோபால் உள்ளிட்டோரும் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இன்று முதல் டிசம்பர் 31 ம் தேதி வரை 137 நாட்கள் தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.  முதல் கட்டமாக 500 கனஅடியில் தொடங்கி 1,000 கனஅடி வரை நீர் திறப்பு உயர்த்தப்படும் என்றும், இதன் மூலம் சேலம் மாவட்டத்தில் 16,443 ஏக்கர் பரப்பும், நாமக்கல் மாவட்டத்தில் 11,327 ஏக்கர் ஏக்கர் பரப்பளவும் அதேபோல ஈரோடு மாவட்டத்தில் 17,230 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்களும் பயனடையவுள்ளது. மொத்தம் 45,000 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறுகிறது. குறிப்பாக கிழக்கு கால்வாய் மூலம் 27,000 ஏக்கரும், மேற்கு கரை கால்வாய் மூலம் 18,000 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.