’’சினிமாவில் யாரும் நஷ்டம் படக்கூடாது என்று நினைப்பவர் ரஜினிகாந்த்’’

 

பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் ரஜினிகாந்துடனான தனது நட்பு குறித்து சிலாகித்து அளித்துள்ள பேட்டி இது:

‘’ தளபதி படம் ரிலீஸ் ஆவதற்கு சில நாட்களுக்கு முன்னர் ரஜினிகாந்தை நான் முதன் முதலாக அவரது வீட்டில் சந்தித்தேன்.

அப்போது நான் தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் சங்க தலைவராக இருந்தேன்.

அந்த முதல் சந்திப்பில் ‘’இன்று முதல் நாம் நண்பர்களாக இருப்போம்’’ என்று சொன்ன வார்த்தையை இன்று வரை ரஜினி தக்க வைத்துக்கொண்டிருக்கிறார்.

நான் நெருக்கடியான தருணங்களில் இருந்த சமயத்தில், தனது படங்களின் விநியோக உரிமையை தயாரிப்பாளர்களிடம் பேசி எனக்கு வாங்கி தந்ததை, நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்.

’’முத்து படம் மிகவும் மெதுவாக நகர்வதாக சினிமாக்காரர்கள் சொல்கிறார்களே?’’ என ரஜினிகாந்த் என்னிடம் கவலையுடன் கூறினார்.

‘ கவலைப்படாதீர்கள்! இந்தப்படம் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று அவரிடம் கூறினேன். அது தான் நடந்தது.

’பேட்ட’ படம் குறித்து எனது விமர்சனத்தை ஆடியோவில் பதிவு செய்து ரஜினிக்கு அனுப்பி வைத்தேன். ’பேட்ட, பொங்கல் பரிசு’ என அதில் குறிப்பிட்டிருந்தேன்.

 அதை கேட்டு விட்டு’’ நீங்க சொன்னா தமிழ் சினிமா சொன்ன மாதிரி’’ என என்னிடம் கூறியபோது, நெகிழ்ந்து போனேன்.

தனது சில படங்கள் சரியாக ஓடாத போது, அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  பணத்தை திருப்பி கொடுத்தவர் ரஜினிகாந்த்.

’’சினிமாவில் முதலீடு செய்த யாரும் நஷ்டம் அடையக்கூடாது’’ என நினைப்பவர், ரஜினிகாந்த். அதனால் தான் அவர் என்றுமே ராஜாவாக இருக்கிறார்’’

-பா.பாரதி.