திருவனந்தபுரம்

ணம் பண்டிகையை முன்னிட்டு 88 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச மளிகைப் பொருட்கள் வழங்கப்படும் எனக் கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

நாடெங்கும் கொரோனா தாக்கம் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் பலரும் பணி இழந்துள்ளனர்.  இவர்களுடைய வாழ்வாதாரத்தைக் காக்க மாநில அரசுகள் இலவச மளிகைப் பொருட்களை ரேஷன் கார்டு மூலம் அளித்து வருகின்றன.   பல மாநிலங்களில் வரும் நவம்பர் மாதம் வரை இந்த பொருட்கள் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை மிகவும் முக்கியமான பண்டிகை ஆகும்.   இதையொட்டி கேரள முதல்வர் பினராயி விஜயன் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  அந்த அறிவிப்பில், “கேரள மாநிலத்தில் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் இலவச மளிகைப் பொருட்கள் வழங்கப்பட உள்ளது.  11 பொருட்களைக் கொண்டுள்ள இந்த கிட் 88 லட்சம் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும்.

இந்த பொருட்களை பாக் செய்யும் பணிகள் 2000 இடங்களில் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் சமீபத்தில் வெள்ளத்தால் பாதிக்கபட்டவர்கள் பெரிதும் பயனடைவார்கள்.   இந்த கிட் ரேஷன் கடைகள் மூலம் அளிக்கப்பட உள்ளன.  இதில் உள்ள பொருட்களின் மதிப்பு ரூ.5000 ஆகும்.  முதல் கட்டமாக மஞ்சள் அட்டை தாரர்களுக்கு ஆகஸ்ட் 13, 14 மற்றும் 16 ஆம் தேதி இவை வழங்கப்படும்.  மீதமுள்ளோருக்கு ஆகஸ்ட் 19, 20, 21, மற்றும் 22 தேதிகளில் வழங்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.