சென்னை :
இந்திய வம்சாவழியில் வந்த கமலா ஹாரிஸ், ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக போட்டியிடுவார் என்று அதிபர் பதவிக்கு போட்டியிடும் ஜோ பிடன் அறிவித்தது முதல் அமெரிக்க தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது..
கமலா ஹாரிஸின் தாயார் ஷ்யாமளா கோபாலன் சென்னையில் பிறந்து அமெரிக்காவில் மருத்துவ பட்டம் பெற்று பணியாற்றியவர் என்பது உலகம் முழுக்க உள்ள பல்வேறு ஊடகங்களிலும் பேசப்பட்டு வரும் வேளையில் அமெரிக்க வாழ் இந்தியர்களும் இந்தியாவும் யாரை ஆதரிக்க போகிறார்கள் என்று தற்போது பேசப்பட்டு வருகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிபர் டிரம்ப் “ஹவ்டி மோடி” என்ற வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதற்கு பதில் வரவேற்பாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் குஜராத்தில் உள்ள அஹமதாபாத் நகரில் “நமஸ்தே டிரம்ப்” எனும் பிரமாண்ட வரவேற்பை அளித்தார் மோடி, அப்போது பேசிய டிரம்ப் “மோடி, எனது ஆருயிர் நண்பர்” என்று கூறியிருந்தார், இருவரும் நட்பை பரிமாறிக்கொண்டனர். இந்த இரண்டு நிகழ்ச்சியும் அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாக்குகளை கவரவே ஏற்பாடு செய்யப்பட்டதாக விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில், டிரம்பை வரவேற்க கோடிக்கணக்கில் செலவு செய்த பிரதமர் மோடி நிதி நெருக்கடி காரணமாக அதிபர் போட்டியிலிருந்து விலகி துணை அதிபராக போட்டியிடும் கமலா ஹாரிசுக்கு தனது அன்புக்கரம் நீட்டி, அமெரிகக அரசியல் வரலாற்றில் இந்தியர் ஒருவர் அரசியல் உயர் பதவிக்கு வர உதவுவாரா ?
டிரம்ப்-க்கு எதிரணியில் போட்டியிடும் சென்னையை பூர்வீகமாகக் கொண்ட இந்திய வம்சாவழியில் வந்த கமலா-வின் பெயர் அமெரிக்க வரலாற்றில் மட்டுமல்ல இந்திய வரலாற்றிலும் பொன்னெழுத்துகளில் எழுத மோடி திட்டமிடுவாரா ?
அல்லது உங்கள் கட்சியில் ஆண்கள் யாரும் இல்லையா என்று வழக்கம் போல் பெண்களை கேலி செய்யும் விதமாக பேசிவரும் டிரம்பிற்கு ஆதரவாக செயல்படுவாரா என்பது அமெரிக்க இந்தியர்களிடையே மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.
மேலும், கமலா ஹாரிஸ் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இடையிலான சமீபத்திய மோதலும் இந்த சந்தேகத்திற்குரிய கேள்விகள் எழுவதற்கு காரணமாக உள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்கா சென்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் காஷ்மீரில் போடப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரியும் காஷ்மீர் நிலை குறித்தும் விவாதிக்க வேண்டுமென கூறிய அமெரிக்க நாடாளுமன்ற குழுவில் இருந்து இந்திய வம்சாவழி உறுப்பினர் பிரமிளா ஜெயபாலை நீக்க கோரியிருந்தார்.
அமெரிக்க நாடாளுமன்ற குழுவினர் ஜெய்சங்கரின் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்ததால், அந்த கூட்டத்தை ரத்து செய்ததோடு காஷ்மீர் விவகாரம் குறித்தும் பேச மறுத்தார். ஜெய்சங்கரின் இந்த செயலை கமலா ஹாரிஸ் அப்போது வெகுவாக கண்டித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.