சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்ததால், அணையின் நீர்மட்டம் 100அடியை நெருங்கி உள்ளது. அதேவேளையில், பவானிசாகர் அணையின் நீர் மட்டம் 100அடியை தாண்டி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேட்டூர் அணை
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் வேகமாக நிரம்பி உள்ளன. இதனால் அணைக்கு வரும் உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஒகேனக்கல் அருவிகள் ஆர்ப்பரித்து கொட்டுகின்றன. இதன் காரணமாக, மேட்டூர் அணையின் நீர் மட்டம் 95.10 அடியாக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் சுமார் 9 அடி அதிகரித்துள்ளது.
தற்போது நீர்வரத்து 1.30 லட்சம் கன அடியில் இருந்து 80 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 58.67 டிஎம்சியாக உள்ள நிலையில் பாசனத்திற்காக 10,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பவானிசாகர் அணை
ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாகவும், சுற்றுவட்டார மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது ஈரோடு பவானிசாகர் அணை. நீலகிரி மலைத் தொடர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், நீலகிரி மாயாறு மற்றும் பில்லூர் அணையில் இருந்து பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகமாகி கொண்டே வருகிறது
இதனால் அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டி உள்ளது. இதனால் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 100.3 அடியை தாண்டியது. அணைக்கு 5000 கனஅடி வீதம் நீர் வந்து கொண்டிருக்கிறது.
இதன் காரணமாக பவானிசாகர் அணையில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்படுகிறது. இதன் காரணமாகவும், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகமாகிக்கொண்டே வருவதாலும், கரை யோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1955ஆம் ஆண்டு கட்டப்பட்ட பவானிசாகர் அணை 26 வது முறையாக 100 அடியை எட்டுகிறது. இந்த வருடம் 100 அடியை தாண்டுவது இதுவே முதல்முறையாகும்.