ஜெய்ப்பூர்
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாத்தை சச்சின் பைலட் ஆதரவாளரான பன்வார்லால் சர்மா சந்தித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இம்மாநிலத்தில் துணை முதல்வராகப் பதவி வகித்த சச்சின் பைலட் திடீரென முதல்வர் அசோக் கெலாத்துக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தினார். இதனால் காங்கிரஸ் ஆட்சியில் குழப்பம் எழுந்தது. சச்சின் பைலட்டுக்கு பாஜகவின் மறைமுக ஆதரவு உள்ளதாக கூறப்பட்டது.
துணை முதல்வர் மற்றும் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டார். சச்சின் பைலட்டுக்கு ஆதரவாக 18 எம் எல் ஏக்கள் உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கு கோர முதல்வர் அசோக் கெலாத் தீர்மானம் செய்தார். இந்நிலையில் திடீர் என மூத்த காங்கிரஸ் தலைவரான பன்வார்லால் சர்மா முதல்வரைச் சந்தித்துள்ளார்.
சச்சின் பைலட் ஆதரவாளர்களில் ஒருவரான பன்வார்லால் சர்மா எதிரணியில் உள்ள அசோக் கெலாத்தை சந்தித்தது பல ஊகங்களை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பன்வார்லால் சர்மா, “நான் அசோக் கெலாத்தை சந்தித்தேன். கட்சி எனடு ஒரு குடும்பம் போன்றது. அசோக் கெலாத் அதன் தலைவர் ஆவார்.
குடும்பத்தில் யாருக்காவது மனத்தாங்கல் இருந்தால் அவர்கள் சாப்பிட மறுப்பார்கள். நான் அது போல் எனது அதிருப்தியைக் கடந்த ஒரு மாதமாக தெரிவித்து வந்தேன். இப்போது எனக்கு எவ்வித அதிருப்தியும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அசோக் கெலாத் செய்தியாளர்களிடம், “இங்குத் தனித் தனி கோஷ்டி என எதுவும் இல்லை. யாரையும் பிடித்து வைத்துக் கொள்ளவும் இல்லை. பன்வார் லாலை யாரும் பிடித்து வைக்கவும் முடியாது. அவர் என்னைச் சந்தித்ததும் நான் அவரை சந்தித்ததும் எங்கள் விருப்பப்படி நடந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.