புதுடெல்லி: 
ராமர் என்றால் அன்பு அவரை ஒருபோதும் யாராலும் வெறுக்க முடியாது என்று காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பூமி பூஜை நேற்று நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க பிரதமர் மோடி ராமர் கோயில் கட்ட அடிக்கல் நாட்டினார்.
ராமர் கோயில் கட்டுவதை பல்வேறு தரப்பினரும் வரவேற்று, அதை பற்றி தங்களது கருத்துக்களை தெரிவித்திருந்தாலும், பல்வேறு காங்கிரஸ் தலைவர்களும் ராமர் கோயிலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தனது டுவிட்டரில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளதாவது:  “ மரியாதைக்குரிய புருஷோத்தமரான கடவுள் ராமர் மனித மாண்புக்கு மிகப் பெரிய உதாரணமாக திகழ்பவர். ராமரின் மனிதத்தன்மை நம் அனைவரது இதயத்திலும் எப்போதும் இருக்கும். ராமர் என்றால் அன்பு. அவரை ஒருபோதும் யாராலும் வெறுக்க முடியாது. ராமர் என்றால் சிந்தனை, ராமர் என்றால் நீதி” என்று பதிவிட்டுள்ளார்.
ராமர் என்றால் அன்பு அவரை ஒருபோதும் யாராலும் வெறுக்க முடியாது- ராகுல் காந்தி
ராமர் கோயில் குறித்து பிரியாங்கா காந்தி டிவிட்டரில் தெரிவித்துள்ளதாவது “எளிமை, தைரியம், கட்டுப்பாடு, தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவை ராமர் என்ற பெயரின் சாராம்சமாகும். ராமர் எல்லோரிடமும் இருக்கிறார்.” என ஹிந்தியில் பிரியங்கா காந்தி டிவிட் செய்துள்ளார். மேலும் “ராமர் மற்றும் சீதையின் அருளால், ராமர் கோயிலின் பூமி பூஜை விழா தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் கலாச்சாரத்திற்கான அடையாளமாக மாறியுள்ளது.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத், ராமர் கோயிலுக்கு வெள்ளி செங்கற்களை நன்கொடையாக வழங்குவதாக  தெரிவித்திருந்தார். பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், அடித்தளம் அமைப்பது “ஒவ்வொரு இந்தியரின் நீண்டகால விருப்பத்தை நிறைவேற்றுகிறது என தெரிவித்துள்ளார். மேலும் பல மூத்த காங்கிரஸ் தலைவர்களும் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா குறித்து உணர்வுப்பூர்வமான கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
ராமர் கோயில் குறித்த ஆதரவு  கருத்துகளை பல்வேறு தலைவர்கள் தெரிவித்துள்ள வேலையில் ராமர் கோயில் குறித்த தொலைகாட்சி விவாதங்களில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.