புதுடெல்லி: தேசிய விருதுகளுக்கான விளையாட்டு வீரர்களை தேர்வுசெய்யும் குழுவில் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் வீரேந்திர சேவாக் இடம்பெற்றுள்ளார்.
இந்தியாவின் புகழ்பெற்ற முன்னாள் ஹாக்கி நட்சத்திரம் தயான் சந்த் பிறந்தநாளான ஆகஸ்ட் 29ம் தேதி, தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த நாளில், விளையாட்டுத் துறையில் சாதித்தவர்களுக்கு ‘அர்ஜுனா’, ‘கேல் ரத்னா’, ‘துரோணாச்சார்யா’ மற்றும் ‘தயான் சந்த்’ உள்ளிட்ட விருதுகள் வழங்கப்படும்.
தகுதிவாய்ந்த வீரர்களை தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழுவில் 12 பேர்களை நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது மத்திய விளையாட்டு அமைச்சகம்.
இக்குழுவில்தான், வீரேந்திர சேவாக்கிற்கு இடமளிக்கப்பட்டுள்ளது. அவர் தவிர, ஹாக்கி அணி கேப்டன் சர்தார் சிங், ‘பாராலிம்பிக்’ வெள்ளி மங்கை தீபா மாலிக் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். குழுவின் தலைவராக, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி முகுந்தகம் சர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.