பிரசாத் ஸ்டுடியோவில், தனக்கு ஒதுக்கப்பட்ட, ரெகார்டிங் தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த, விலை மதிப்பற்ற இசை குறிப்புகள் உள்ளிட்ட பொருட்கள் திருடி விற்கப்பட்டுள்ளன என, இசையமைப்பாளர் இளையராஜா போலீசில் புகார் அளித்துள்ளார்.

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் அவருக்கான தனி தியேட்டரை பிரசாத் நிர்வாகம் ஒதுக்கிக் கொடுத்திருந்ததில் இசையமைத்து வந்தார் .

தற்போது பிரசாத் ஸ்டுடியோ வருமானம் இல்லாமல் இருப்பதால் ஸ்டுடியோவை இடித்துவிட்டு, மாற்று தியேட்டர் கொண்டுவர நிர்வாகத்தினர் முடிவு செய்தனர். இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் தலைமையில் திரையுலகினர் ஒன்றுகூடி இளையராஜாவுக்கு ஆதரவாக பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பிரசாத் ஸ்டுடியோவில் இருந்து தன்னை காலி செய்ய தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் தற்போது கோவிட்19 காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் இதனை பயன்படுத்திய பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகி சாய் பிரசாத் இளையராஜாவிற்கு சொந்தமான அறையை கள்ள சாவி போட்டு திறந்து உள்ளிருந்த விலையுயர்ந்த இசை கருவிகளை சேதப்படுத்தியும், இசை கருவிகளை திருடி கொண்டு போய் விற்றதாகவும், தனது ஸ்டுடியோவில் இருந்த இசைக்குறிப்புகளை சேதப்படுத்தியதாகவும், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.