மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி பெரு முதலாளிகளுக்கு துணைபோகும் பா.ஜ.க. அரசு
◆ வாழப்பாடி இராம. சுகந்தன் ◆
சுந்தர்
சென்னை :
இந்தியாவில் ஊரடங்கு தொடங்கியது முதல் கடந்த நான்கு மாதங்களில் தொழிலாளர் நல சட்டங்களில் திருத்தம் தொடங்கி ரயில்வே தனியார் மயம், விவசாய நிலத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் EIA சட்ட முன்வடிவு, புதிய கல்வி கொள்கை திட்டம் என பல்வேறு சட்டங்களில் பெரும்பான்மை என்ற பெயரில் சட்ட விதிகளுக்கு முரணாக எந்த அவையிலும் முன்வடிவைத் தாக்கல் செய்யாமல் மத்திய பா.ஜ.க. அரசு மக்களை வஞ்சிக்கும் விதமாக நிறைவேற்றி வருகிறது.
1986 ம் ஆண்டு ராஜீவ் காந்தி அவர்களால் கொண்டுவரப்பட்ட புதிய கல்விக் கொள்கையில், மகளிர், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் ஆகியோர் கல்வியறிவு பெற ‘கரும்பலகை செயல்திட்டம்’ (Operation Blackboard) எனும் அனைவருக்கும் கல்வி கிடைக்கக்கூடிய வகையில் மாற்றம் செய்யப்பட்டது.
தற்போது கொண்டுவந்திருக்கும் புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டாலும் ராஜீவ் காந்தி கண்ட ‘கரும்பலகைத் திட்டத்தை’ நீக்கி 6 ம் வகுப்பு முதல் கணினி வழிக் கல்வி என்ற சரத்தை கொண்டு வந்திருக்கிறார்கள்.
கணினிவழிக் கல்வி என்பது நாட்டில் தற்போதுள்ள உள்கட்டமைப்பில் சாத்தியமா என்பதும், இதனால் நகர்ப்புற மற்றும் வசதிபடைத்த மாணவர்களே பெரும்பான்மையாக பயனடையும் நிலை ஏற்பட்டுள்ளது. கிராமப்புற மற்றும் அடிப்படை வசதிகளற்ற மாணவர்கள் மும்மொழிக் கொள்கையில் சிக்குண்டு தொழிற் கல்வி, செயல்முறைக் கல்வி என்று மேல்பூச்சோடு வரும் குலக்கல்வித் திட்டத்திற்கு தள்ளப்படும் நிலைமைக்கு சென்றுள்ளனர்.
ஊரடங்கு தொடங்கிய நான்கு மாதங்களில் இந்தியாவில் இதற்கான உள்கட்டமைப்பு இருக்கிறதா என்பது வெட்டவெளிச்சமாக தெரிய வந்திருக்கிறது.
கணினி வழிக் கல்விக்கு தேவையான கணினி மற்றும் இணையதள வசதி தற்போது இந்தியாவில் எந்த நிலையில் உள்ளது என்பதை தெரிந்துகொண்டால் இதனால் பயன்பெறப்போவதும் சீரழியப்போவதும் யார் என்ற கேள்விக்கு விடை தெரியும்.
இணையதள தொடர்புக்கு முதுகெலும்பாக இருக்கும் தொலைத்தொடர்புத் துறையில் பி.எஸ்.என்.எல். என்ற அரசு நிறுவனம் நலிவுறுத்தப்பட்டு தனியார் நிறுவனங்கள் கோலோச்சி வருகிறது, இந்த தனியார் நிறுவனங்கள் மூலம் நாட்டில் சுமார் 5,20,000 (2019 ஜூலை கணக்கெடுப்பின் படி) தொலைத்தொடர்பு கோபுரங்களை நிறுவி அதன் மூலம் தொலைத்தொடர்பு மற்றும் இணைய வசதி வழங்கி வருகிறார்கள்.
மேலும், நிலையான இணைய வசதிக்குத் தேவையான பைபர் ஆப்டிக் கேபிள் இணைப்புகள் என்பது 20% கோபுரங்களில் மட்டுமே உள்ளது அதாவது சுமார் 1 லட்சம் கோபுரங்கள்.
தமிழகத்தைப் பொறுத்தவரை அரசு, அரசு உதவி பெரும் தனியார் பள்ளிகள் மற்றும் சுயநிதிப் பள்ளிகள் என மொத்தம் சுமார் 60,000 பள்ளிகள் உள்ளன இதில் அரசு பள்ளிகள் மட்டுமே சுமார் 40,000 உள்ளன. கடந்த 2018-19 ம் நிதியாண்டில் தான் 9 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு மாணவர்கள் வரை பயன்பெறும் வகையில் தமிழக அரசின் அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் சுமார் 20,000 அரசு பள்ளிகளுக்கு நிலையான இணைய வசதி ஏற்படுத்தவும் 40,000 ஆசிரியர்களுக்கு இணைய வழிக் கல்வி பயிற்றுவிக்க பயிற்சி அளிக்கவும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
50% பள்ளிகளுக்கு மட்டுமே அதுவும் 9 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் மட்டுமே பயன்பெறும் வகையில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டதா என்பது தெரியாத நிலையில், தற்போது மத்திய அரசு 6 ம் வகுப்பு முதல் கணினிக் கல்வி என்று அறிவித்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் ஒரு கோடிக்கும் அதிகமான மாணவர்கள் 6 முதல் 12 ம் வகுப்பு வரை பயின்று வருகின்ற நிலையில் இவர்களுக்கு தேவையான கணினிகளைப் பெறுவதற்கு எத்தனையாண்டுகள் ஆகும் என்பது புரியாத புதிர்.
பள்ளிகளில் இணைய வசதி இந்த நிலைமை என்றால், கடந்த 4 மாதங்களாக ஆன்லைன் கல்வி என்ற பெயரில் மாணவர்கள் படும் வேதனை அதைவிட வருத்தமளிப்பதாக உள்ளது. நிலையான இணைய வசதி இல்லாத நிலையில் தங்கள் கைபேசி இணைய வசதியையே நம்பி வரும் இந்த மாணவர்கள் சிக்னல் ட்ராப், சிக்னல் கோளாறுகளால் தங்கள் படிப்பை தொடர முடிவதில்லை.
தொலைத்தொடர்பு கோபுரங்களில் அமைக்கப்பட்டிருக்கும் ட்ரான்ஸ் ரிசீவர் எனப்படும் டி.ஆர்.எக்ஸ்-சே (TRX) இதற்குக் காரணம், டி.ஆர்.எக்ஸ் என்பது ஒரு தொலைத்தொடர்பு கோபுரத்தின் வழியாக ஒரே நேரத்தில் எத்தனை அழைப்புகளை செயல்படுத்த வேண்டும் என்பதை நிர்ணயிக்க உதவுகிறது, இந்த டி.ஆர்.எக்ஸ் குறைந்தபட்சம் 8 முதல் அதிகபட்சம் 16 டி.ஆர்.எக்ஸ் என்ற அளவில் செல்போன் கோபுரங்களில் வைக்கப்பட்டிருக்கும். பெரு நகரங்களில் உள்ள ஐ.டி. காரிடார் பகுதிகளில் அதிகபட்சமாக 16 டி.ஆர்.எக்ஸ் அளவுகொண்ட ட்ரான்ஸ் ரிசீவர் நிறுவப்படுவது வழக்கம். கிராமப்புறம் மற்றும் புறநகர் பகுதிகளில் இதன் அளவு என்னவாக இருக்கும் என்பது சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
இதுபோன்ற உயர் அழுத்த கோபுரங்கள் அமைந்த பகுதியில் பணி புரிந்த ஊழியர்கள் தற்போது தங்கள் வீடுகளில் இருந்து பணியைத் தொடர்வதாலும், வீட்டில் பிள்ளைகளின் படிப்பு உள்ளிட்டவற்றிற்கு இணைய வசதி சீரான முறையில் இல்லாமலும், சீன தயாரிப்புப் பொருட்கள் இறக்குமதி செய்ய ஏற்பட்டிருக்கும் சிக்கலால் கணினி உள்ளிட்ட பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதும் உள்கட்டமைப்பில் இந்தியா பின்தங்கி இருப்பதையே காட்டுகிறது.
அதுமட்டுமல்ல, பள்ளிகளில் நிலையான இணைய வசதி இல்லாததை உறுதிப்படுத்தும் விதமாக, தமிழக அரசும் மாநிலத்தில் பல்வேறு வகுப்புகளில் பயிலும் 50,00,000 த்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு கேபிள் டிவி மூலம் தொலைக்காட்சியில் கல்வி நிகழ்ச்சி என்ற பெயரில் ஒருவழிக் கல்வி போதிக்க அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் வளர்ந்த மாநிலங்களில் ஒன்றான தமிழகத்திலேயே உள்கட்டமைப்புகளில் இந்த நிலமையென்றால், வளர்ச்சியில் பின்தங்கிய மாநிலங்களில் என்ன வென்று யூகிக்க முடியவில்லை.
உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள கல்வித் தரத்துடன் போட்டிபோட ஏதுவாக அமரர் ராஜீவ் காந்தி தொலைநோக்கு பார்வையுடன் கொண்டுவந்த கல்விக்கொள்கையால் இந்திய மாணவர்கள் பலர் கணினித் துறையில் முன்னேறி உலகின் முன்னணி நிறுவனங்களின் தலைவர்களாக விளங்கி வருகின்றனர்.
கல்விக்கு தேவையான அடிப்படை உள்கட்டமைப்பை சீர் செய்யாமல் தற்போது கொண்டுவந்திருக்கும் புதிய கல்விக் கொள்கையால் இதுபோன்று உலகின் முன்னணி நிறுவனங்களின் தலைவர்களாக உருவாக முடியுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
5ஜி, செயற்கை நுண்ணறிவு என்று வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் 140 கோடி மக்கள் தொகையைக் கொண்ட சீனாவில் இந்தியாவை விட நான்கு மடங்கு அதிகமாக சுமார் 20 லட்சம் செல்போன் கோபுரங்கள் உள்ளன.
இந்தியாவில் உள்ள 5,20,000 கோபுரங்களில் ஜியோ நிறுவனத்திற்கு சொந்தமான 1,70,000 க்கும் மேற்பட்ட கோபுரங்களை சுமார் 27,000 கோடி ரூபாய்க்கு புரூக்பீல்ட் எனும் நிறுவனத்திற்கு கைமாற்றி கொழுத்தலாபம் சம்பாதித்திருக்கிறது ரிலையன்ஸ் நிறுவனம். இந்தியாவின் உள்கட்டமைப்பை கடந்த 6 ஆண்டுகளில் எந்த வித முன்னேற்றமும் செய்யாமல், 500 ஆண்டுகள் பின்னோக்கி இட்டுச்செல்லும் பா.ஜ.க அரசு மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி இக்கட்டான காலகட்டத்திலும் இந்தியாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சி பற்றி கவலைப்படாது தங்கள் சொந்த வருமானத்தை பெருக்கிக்கொள்ளும் பெருமுதலாளிகளுக்கு துணை நிற்பது வேதனையளிக்கிறது.
மாணவர் நலனிலும் இந்தியாவின் உள்கட்டமைப்பிலும் அக்கறை கொண்டு நேரு முதல் மன்மோகன் சிங் வரை பலரும் பல்வேறு நிலையில் கொண்டுவந்த முன்னேற்றத்தை கடந்த 6 ஆண்டுகளில் கூறு போட்டு கொள்ளை லாபமீட்டும் தனியாருக்கு தாரைவார்த்து மக்கள் நலனை குழிதோண்டி புதைத்தது தான் மிச்சம்.