ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்- அமைச்சர் அசோக் கெலாட்டுக்கு எதிராக கலகம் விளைவித்த சச்சின் பைலட், துணை முதல்-அமைச்சர் பதவியில் இருந்தும், மாநில காங்கிரஸ் தலைவர் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
இதனால் மாநில அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் , சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க அசோக் கெலாட் முடிவு செய்துள்ளார்.
சட்டப்பேரவையை கூட்ட ஆரம்பத்தில் தயக்கம் காட்டிய ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா, ஒருபடியாக வரும் 14 ஆம் தேதி பேரவையை கூட்ட உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் ஜெய்ப்பூரில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அசோக் கெலாட்’’ ராஜஸ்தான் மாநில ’’குதிரை பேர’’ வியாபாரத்தின் விலை திடீரென உயர்ந்து விட்டது’’ என்று கேலியாக குறிப்பிட்டார்.
முன்னர் காங்கிரஸ் அரசுக்கு எதிராக வாக்களிக்க ’’அட்வான்ஸ்’’ தொகையாக 10 கோடி ரூபாயும் வாக்களித்த பின்னர் 15 கோடி ரூபாயும் தருவதாக எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசப்பட்டது’’ என்று அவர் குறிப்பிட்டார்.
‘’ ஆனால் ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி பேரவை கூட்டப்படும் என்ற அறிவிப்பு வெளியான பின், எம்.எல்.ஏ.க்கள் விலை எல்லையில்லாத அளவுக்கு அதிகரித்து விட்டது’’ என்று குற்றம் சாட்டிய அசோக் கெலாட்’’ இவ்வாறு விலை பேசுவது யார் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும் ‘’ என்று கூறினார்.
-பா.பாரதி.