டில்லி

ந்தியா நேற்று அறிவித்துள்ள புதிய கல்விக்கொள்கையின்படி  வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் கல்வி மையங்கள் திறக்க அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவில் அரசுப் பள்ளிகள் மற்றும் தனியார்ப் பள்ளிகளில் கல்வித் தரத்தில் மாபெரும் வேறுபாடு நிலவி வருகிறது.   அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் பலர் போதிய ஆசிரியர் இன்மை, சரியான மேலாண்மை இன்மை மற்றும் போதிய நிதி இன்மை ஆகியவைகளால் கல்வியில் பின் தங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.  எனவே நாட்டில் உள்ள 24.8 கோடி மாணவர்களில் பாதிக்கும் மேலானோர் தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர்.

முந்தைய அரசு இந்தக் குறையைப் போக்க வெளிநாட்டுக் கல்வி நிலையங்களை இந்தியாவுக்குள் அனுமதிக்கப் பல முறை முயற்சி எடுத்தது.  அப்போது பாஜக மற்றும் அதன் உறுப்பினர்கள் இதை கடுமையாக எதிர்த்தனர்.   ஆனால் பல அரசு அதிகாரிகளின் 7.5 லட்சம் குழந்தைகள் வெளிநாடுகளில் கல்வி கற்க அனுப்பப்படுகின்றனர்.  இதற்காக நாட்டில் கோடிக்கணக்கான டாலர்கள் செலவிடப்படுகின்றன.

இந்நிலையில் நேற்று மோடியின் தலைமையில் அமைந்த அமைச்சரவை குழு நேற்று புதிய கல்விக் கொள்கையை அறிவித்தது.  அதன்படி அரசு உலகின் மிகச் சிறந்த பல்கலைக்கழகங்கள்  இந்தியாவில் தங்கள் கல்வி மையங்களைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு திறக்கப்படும் கல்வி மையங்களில் கல்விக் கட்டணத்தை ஒழுங்குபடுத்த அமைப்பு ஏதும் நிறுவப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய கல்விக் கொள்கையின்படி 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குக் கல்வி கற்றல் கட்டாயம் ஆக்கப்பட உள்ளது. அத்துடன் சமஸ்கிருதம் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளும் கட்டாயப் பாடமாக்கபட்டுள்ளது.  வரும் 2035 ஆம் வருடத்துக்குள் உயர்நிலைப் பள்ளிக் கல்வி மாணவர்களின் எண்ணிக்கையை 50% அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.