நட்பு நாள் – நாளும், நாளும் …..

பா. தேவிமயில் குமார்

 

வா, நட்பே

 

வாசலில் வந்து நின்ற
நட்பினை
ஓடி வந்து வரவேற்றான்
நண்பன் !
காதல் கோபித்துக்கொண்டு
கொல்லைப்புறம்
ஓடியது …..
ஏன் என்னை மட்டும்
எப்போதும் ரகசியமாக
வைத்திருக்கிறாயென ?

 

ஒரு உலகம்

 

உனக்கும் எனக்கும் ஒரு உலகம்
என்னது காதல் !
ஆனால்….
எனக்கு மட்டுமல்ல நம்
எல்லோருக்கும் ஒரு உலகம்
என்றது நட்பு !

 

உறவு

 

உறவுகளைத் தக்க வைக்க
வாரி இறைத்தேன் பாசத்தை !
ஆனால்….
தானாக வந்து என்னிடம்
தங்கிக் கொண்டது நட்பு !

 

சொந்தமில்லை தான் ….

 

காதலனிடமோ
காதலியிடமோ
சொல்லாத ரகசியங்களையும்
சொல்லி ஆறுதல் தேடும்
சொந்தமல்லாத,
சொந்தம் தான் “நட்பு”

 

திரை

 

நான் காதல்வயப்பட்டதை
காதலிடம் கூட சொல்லவில்லை !
உன்னிடம் தான்
உளறிவிட்டேன் நட்பே !
நமக்கிடையில் “திரை” என்பது
எந்நாளும் இல்லையோ ?

 

அன்பாரம்

 

காதல் சில
காலங்களுக்குப் பிறகு
“அதிகாரம்” யாருக்கு என்ற
ஆட்டத்தில் சிக்கிவிடும் !
ஆனால்….
நட்பில் “அன்பாரம்” மட்டுமே
நிச்சயமாய்  “அதிகாரம்” இருக்காது

 

உன்னுடன்

 

வெட்கப்பட்டுக்கொண்டே
கேட்கும் காதல்
வா ! என்னிடமென்றது !
வெட்கப்படாமல்,
கேட்கும் நட்பு,
உன்னுடன் வருகிறேன் என !

 

சுகம்

 

நான் உனக்கு
ஏணியாக நிற்கிறேன்
ஏறிக்கொள் !
என்னை மிதித்தாவது நீ
ஏறிவிட மேலே !
என தன்னைத்தானே
சுருக்கிக் கொள்ளும்
சுகம் “நட்பில்” மட்டுமே
சாத்தியம் ! சத்தியமும் கூட

 

எதுவுமில்லை

 

வேதனை இல்லை !
வெட்கம் இல்லை !
பாலுணர்வு இல்லை !
பகல்கனவு இல்லை !
பயமும் இல்லை !
ஏக்கம் இல்லை !
எதிர்பார்ப்பு இல்லை !
திட்டினாலும் கோபமில்லை !
தட்டிக்கொடுத்தாலும் எதிர்பார்ப்பில்லை !
தாயின் அன்புக்கு நிகரான உறவு
தாயின் மறுவடிவமே “நட்பு”

 

வீடு

 

வீடு காட்டும் போது
விருந்தினர்களுக்கு வரவேற்பறையும்,
உறவினர்களுக்கு நடுக்கூடமும்,
கணவன், மனைவிக்குப் தனியறையும்,
காதல் மனைவிக்கு சமையலறையும்
மனதில் வைத்துக் கட்டினேன் !
ஆனால்….
குழந்தைகளுக்கும், நட்புக்கும்
குறைந்தபட்சம் ஒரு அடி கூட விடவில்லை !
ஏனென்றால்….
அவர்கள் மட்டுமே வீட்டின்
ஒவ்வொரு இடமும் சென்றுவர,
சிறப்பான, சுதந்திரமான
உண்மையான, தூய்மையான
உரிமை பெற்றவர்கள் !

 

– பா. தேவிமயில் குமார்