ஜெய்ப்பூர்: தேவை என்றால் பிரதமர் இல்லம் முன் சென்று போராடுவேன், குடியரசு தலைவரையும் சந்தித்து முறையிடுவேன் என்று ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கூறி உள்ளார்.
ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு எதிராக துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட் போர்க்கொடி உயர்த்தினார். அதனால் பைலட் உள்பட அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் மீது தகுதி நீக்க நோட்டீஸை ராஜஸ்தான் சபாநாயகர் அனுப்பினார்.
இது தொடர்பாக ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சச்சின் பைலட், அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று நீதிமன்றம் கூறியது. அதனை தொடர்ந்து ராஜஸ்தான் சட்டமன்றத்தை கூட்டி, தனது பெரும்பான்மையை காட்ட அசோக் கெலாட் தீவிரம் காட்டி வருகிறார்.
இந் நிலையில், இன்று ஓட்டல் ஒன்றில் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய முதலமைச்சர் கெலாட், தேவைப்பட்டால் பிரதமர் இல்லம் முன்பு சென்று போராடுவேன். குடியரசு தலைவரையும் சந்தித்து முறையிடுவேன். ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை முறியடிக்க பாஜக மேற்கொள்ளும் சதி வெற்றி பெற விடமாட்டேன் என்று ஆவேசமாக கூறினார்.
முன்னதாக நேற்று ஜெய்ப்பூரில் ஆளுநரை சந்திக்க தமது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் அவர் சென்றார். அப்போது, ஆளுநர் மாளிகை முன்பு காங்கிரஸ் எம்.எல்.ஏ நேற்று தர்ணாவில் ஈடுபட்டது, குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel