நிதி ஒதுக்கீடு மசோதா நிறைவேறியதை அடுத்து காலவரையின்றி சட்டப்பேரவை ஒத்திவைப்பதாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.
இந்த நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கதிர்காமம் தொகுதி எம்.எல்.ஏ-வான என்.எஸ்.ஜே. ஜெயபாலுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்பபட்ட தகவல் வெளியானது. இதையடுத்து அவர் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
என்.எஸ்.ஜே. ஜெயபால் கடந்த 3 நாட்களாக சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்றதால், இன்றைய கூட்டத் தொடரை சட்டமன்றத்தை விட்டு வெளியே நடத்த சபாநாயகர் முடிவு செய்தார். அதன்படி, சட்டமன்றத்திற்கு வெளியே மரத்தடி பகுதியில் தற்காலிக கூடாரம் அமைக்கப்பட்டு சபை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தொடரில், நிதி ஒதுக்கீடு மசோதா குறித்து விவாதம் நடைபெற்றது. விவாதத்துக்கு பதில் அளித்து பேசிய முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி தனியார் மருத்துவக்கல்லூரிகளில் அரசுக்கு 50% இட ஒதுக்கீடு அளிக்க சட்டவரைவு இயற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிந்துரை வந்தவுடன் சட்டசபையை கூட்டி சட்டம் நிறைவேற்றப்படும் என்று கூறினார். அதைத் தொடர்ந்து ஒருமனதான மசோதா நிறைவேற்றப்பட்டது.
அதையடுத்து, புதுச்சேரி சட்டப்பேரவை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.