வதோதரா: குஜராத் மாநிலத்தில், ஒரு பசுமாட்டின் வயிற்றுக்குள் இருந்து, 20 கிலோ அளவிலான பிளாஸ்டிக் பொருட்கள், உலோக வயர்கள் மற்றும் இதரக் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.
இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பாக கூறப்படுவதாவது; குஜராத் மாநிலத்தின் ஆனந்த் மாவட்டத்தைச் சேர்ந்த, போர்சாட் தாலுகாவின், கவிதா கிராமத்தைச் சேர்ந்தவரின் பசு ஒன்று, கடந்த 20 நாட்களாக எந்த உணவும் உட்கொள்ளாமல் சிரமப்பட்டு வந்தது.
இதுதொடர்பாக, கால்நடை மருத்துவர்களிடம் தெரிவிக்கப்பட, பசுவை பரிசோதித்த அவர்கள், அதன் வயிற்றுக்குள் ஏதோ வேண்டாத பொருள் இருக்க வேண்டும் என்பதை அனுமானித்து பரிசோதனை செய்தனர். அதில், பசுவின் வயிற்றுக்குள் பிளாஸ்டிக், உலோக வயர்கள் கலந்த குப்பைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர், அவை அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டன. அந்தக் குப்பைகளின் எடை 20 கிலோ இருந்தது. பசுவை, வெளியிடங்களில் சுதந்திரமான முறையில் அதன் உரிமையாளர் மேய விட்டதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
மேலும், கடந்த 20 நாட்களாக உணவு எதுவும் உட்கொள்ளாமல் இருந்தாலும், அதன் நோய் எதிர்ப்புத் திறனே, மரணமடையாமல் காத்துள்ளது. அதேசமயம், அதன் எடை வெறும் 40 கிலோ என்ற அளவில் சுருங்கிவிட்டது.
– மதுரை மாயாண்டி