திரைக்கு வராத உண்மைகள் :4:
ஆரம்ப காலத்தில், ரஜினிகாந்தின் அறைத் தோழராக இருந்தவர் திருஞானம். ரஜினி நடித்த முதன் முதலில் நடித்த “அபூர்வராகங்கள்” ,படம் ரிலிஸ் ஆனபோது , படத்தின் முதல் காட்சியை ரஜினிகாந்துடன் தான் பார்த்த அனுபவத்தைச் சொல்கிறார்:
’’அபூர்வ ராகங்கள் படம் வெளியான நாள். .சென்னை தி.நகரில் இருக்கும் கிருஷ்ணவேணி தியேட்டரில் முதல் காட்சியைப் பார்க்க நானும் ரஜினியும் ஆவலோடு போனோம். தான் திரையில் தோன்றியதும் ரசிகர்கள் அவரை எப்படி ரசிக்கிறார்கள் என்பதைப் பார்க்க ரொம்ப ஆவலாக இருந்தார் ரஜினி.
தியேட்டர் வாசலில் இருந்த காவலாளியிடம் ரஜினி கேட்டார்.
‘’மேனேஜர் ரூம் எது?”
நெற்றியில் புரளும் தனதுமுடியைக் கையால் அலட்சியமாக தள்ளிவிட்டு கொண்டே, ரஜினி கம்பீரக் தோனியில் கணீரென்ற குரலில் கேட்கவும்,, அந்த காவலாளி ரஜினியை மேலும் கீழும் ஒருமுறை பார்த்து விட்டு, ‘’அதோ இருக்கு சார்!’’என்று மேனேஜர் அறையைக் காட்டினார்!
ரஜினி என்னையும் அழைத்துக் கொண்டு மேனேஜர் அறைக்குச் சென்றார்.
அங்கே நின்று கொண்டு இருந்தவர்களுக்கு, நாமும் இதைப் போல் மேனேஜர் அறைக்கு வழிகேட்டுக் கொண்டு உள்ளே நுழைந்திருக்கலாமே என்ற நினைப்பு.
’’சார்….’’
மேனேஜர் அறைக்குள் நுழைந்த ரஜினி, ;அவர் எதிரில் நின்று மெல்ல அழைத்தார்.
‘’என்ன விஷயம்?’’
மேனேஜர் வேண்டா வெறுப்பாகக் கேட்டார்.’
’நான் இந்தப் படத்தில் நடிச்சிருக்கேன். உங்க தியேட்டரில் படம் பார்க்கணும்னு ஆசை. இரண்டு டிக்கெட் கொடுக்கச் சொன்னால் போதும்.!’’ – ரஜினி ஆர்வத்தோடு கேட்டார்.
‘’சரிதான்,போங்க சார்! உங்களுக்கு எப்படியாவது படம் பார்க்கணும். அதுக்காக எதை வேணும்னாலும் சொல்வீங்க. டிக்கெட் வேணும்னா, போய் க்யூ விலே நின்னு வாங்கிக்குங்க. இதுக்கு போயி ஏன் பொய் சொல்றீங்க?’’ என்று கடுமையாக் கேட்டார் மேனேஜர்.
’’பொய்யில்லை சார். உண்மையிலேயே நான் நடிச்சிருக்கேன்,,சார்! ப்ளீஸ்..இரண்டு டிக்கெட் குடுங்க’’ – மீண்டும் கேட்டார் ரஜினி.
‘’உங்களை மாதிரி எத்தனையோ பேரைப் பார்த்துட்டோம். ஒரு தடவை சொன்னா கேளுங்க. எனக்கு நிறைய வேலை இருக்கு!’’ மேனேஜர் விரட்டாத குறையாகச் சொன்னார்.
நம்பிக்கையோடு உள்ளே நுழைந்த ரஜினிக்கு ஏமாற்றம் தாங்க முடியவில்லை. விருட்டென்று தனக்கே உரிய மின்வெட்டு போன்ற நடையோடு, தியேட்டரை விட்டு வெளியே சென்றார்.
அவருடன் நானும் ஓடினேன்.
பிரபல இயக்குநர் (கே.பாலசந்தர்) உருவாக்கிய படம் என்பதால் ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் கவுண்டரில் அலை மோதியது.
ரஜினி எப்படியாவது டிக்கெட் வாங்கிவிட வேண்டும் என துடித்தார். பாலசந்தர் படத்தில் ஒரு காட்சியிலாவது நடித்துவிட மாட்டோமா என்று எண்ணற்ற புதுமுகங்கள் துடித்துக்கொண்டிருந்த அந்த நாளில், அப்படி வாய்ப்பு கிடைத்து நடித்த படத்தை, முதல் நாள் மக்களுடன் சேர்ந்து பார்பதற்கு வந்து விட்டு, பார்க்காமல் வீட்டுக்குத் திரும்பிப்போக ரஜினிக்கு எப்படி மனம் வரும்.
எனக்கு முன்னால் ஓடிப்போய் ,எப்படியோ ஒரு வழியாக இரண்டு டிக்கெட் வாங்கி விட்டார். அவர் முகமெல்லாம் பூரிப்பு!
சட்டையெல்லாம் வியர்வையில் நனைந்து தொப்பையாகி விட்டிருந்தது. அவசரம் அவசரமாக சரிசெய்து கொண்டார்.
தியேட்டருக்குள் சென்று அமர்ந்தோம். அவர் நடித்த காட்சி வந்தது. ரசிகர்கள் எல்லோரும் திரையைப் பார்த்தார்கள் ரஜினியோ ரசிகர்களின் முகங்களை, அவர்களது ரீ ஆக்ஷனையே கவனித்துக் கொண்டிருந்தார்.
யாரும் இவரைக் கவனிக்கவில்லை, படம் முடிந்து வெளியில் வந்து தியேட்டர் வாசலில் நின்றார். ஒருவேரும் இவரை அடையாளம் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. அவர் முகத்தில் சற்றே ஏமாற்றம் தலைகாட்டியது.
‘அப்போது ஒரு பெண் குரல்…
’’சார்…’’
ரஜினி திரும்பினார். அங்கு ஒரு பெண் நின்றுக் கொண்டிருந்தாள்.
’’நீங்கதானே இந்த படத்திலே நடிச்சிருக்கிங்க?’’
அவ்வளவுதான் பேசினாள்.
ரஜினி முகத்தில் தனி ஒளி!அவர் கண்கள் பணித்தன. அவள் குரல் அவர் காதில் ஆலய மணியோசை போல் ஒலித்திருக்க வேண்டும்.
‘’’ஆமாம்…’’என்று புன்சிரிப்போடு சொன்னார் ரஜினி. அந்தப் பெண் தன் தந்தையை அழைத்து, ‘’அப்பா! இவர்தான் இந்தப் படத்தில் ஸ்ரீவித்யாவின் ஹஸ்பெண்டாக நடித்தவர்….’’ என்று ரஜினியை அறிமுகப்படுத்தினார்.
“ரொம்ப நல்லா நடிச்சிருக்கீங்க சார்…’’என்று மீண்டும் சொன்னாள் அந்தப் பெண்.
ரஜினி, ‘’தேங்க் யூ’’என்றார். அவளும் அவள் தந்தையும் விடைபெற்றுக் கொண்டு போய் விட்டார்கள்.
அதன் பிறகு அந்தப் பெண்ணை மீண்டும் ரஜினி சந்தித்ததில்லை
அந்த சம்பவத்தைப் பற்றி நானும் ரஜினியும் எங்கள் தொடக்க காலத்தைப் பற்றிப் பேசும் போதெல்லாம் நினைத்துக் கொள்வோம்.
அந்த முதல் ரசிகையை மீண்டும் சந்திக்க முடியாமலேயே போய்விட்டதே என்கிற வருத்தம் ரஜினிக்கு இன்றளவும் உண்டு!” என்று சொல்லி முடித்தார் ரஜினியின் ஆரம்பகால நண்பரான ஞானம் என்றழைக்கப்படும் திருஞானம்.
(தொடரும்…)