இம்பால், மணிப்பூர்
பிரதமர் மோடியை விமர்சித்ததற்காக சிறை தண்டனை பெற்ற மணிப்பூரை சேர்ந்த பத்திரிகையாளர் கிஷோர் சந்திரா வெங்காம் க்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆறுதல் கடிதம் எழுதி உள்ளார்.
மணிப்பூர் மாநில தலைநகரான இம்பாலை சேர்ந்த பத்திரிகையாளர் கிஷோர் சந்திரா வாங்கெம், இவர் உள்ளூர் தொலைக்காட்சியான ஐஎஸ்டிவியில் பணி புரிந்து வருகிறார். அரசைக் குறித்த தனது விமர்சனங்களை மக்களுக்கு இவர் தைரியமாக வெளியிடுவதால் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. இவர் முகநூலில் ஒரு வீடியோ ஒன்றை பதிந்திருந்தார்.
அந்த வீடியோவில் வாங்கெம் பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநில அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். மாநில அரசு சுதந்திரத்துக்காக போரிட்ட ஜான்சி ராணிக்கு விழா எடுத்ததை குறித்து அவர் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இந்த வீடியோ பலராலும் பரவப்பட்டு வைரலாகியது. இதை ஒட்டி மணிப்பூர் அரசு அவரை கடந்த நவம்பர் மாதம் 21 ஆம் தேதி கைது செய்துள்ளது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள வாங்கெம் விடுதலை செய்ய வேண்டும் என இந்திய பத்திரிகையாளர் சங்கம் கோரிக்கை விடுத்தது. ஆயினும் வாங்கெம் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். இது குறித்து வாங்கெம் அப்போது நடைபெற்ற 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்காக தாம் சிறையில் அடைக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார். அது மட்டுமின்றி தமது பேச்சுரிமையை அரசு தடுப்பதாகவும் அவர் குற்றம் சாட்டி இருந்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடிதம் ஒன்றை வாங்கெம் க்கு அனுப்பி உள்ளார். அந்தக் கடிதத்தில், “இது எதிர்ப்புக் குரலை ஒடுக்க மாநில அரசு செய்யும் ஒரு சதி ஆகும். கடந்த சில மாதங்களாகவே பாஜக அரசு இது போன்ற அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக நடந்து வருவதை நாம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். இது மணிப்புர் மாநில பாஜக அரசின் அடக்குமுறக்கு ஒரு எடுத்துக்காடு. நானும் காங்கிரஸ் கட்சியும் என்றும் உங்களுக்கு ஆதரவாக இருப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.