மிக பிரம்மாண்டமான ஏற்பாடுகள், அதைவிட பிரம்மாண்டமான விளம்பரங்கள்… என்று பெரும் எதிர்ப்பார்ப்பை கிளப்பிய “சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு” இன்று முற்பகல், முதல்வர் ஜெயலலிதாவின் உரையுடன் துவங்கியிருக்கிறது.
இந்த நிலையில், ஏற்கெனே தமிழகத்தில் முதலீடு செய்துள்ள சில தொழிலதிபர்களை சந்தித்து, இந்த மாநாட்டால் பலன் கிடைக்குமா என்று கேட்டோம். அதற்கு அவர்கள் கூறிய பதிலின் தொகுப்பு:
:இரண்டு நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டின் மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் தமிழகத்துக்கு முதலீடு வரும் என்கிறது அரசு தரப்பு. அது எந்த அளவுக்கு சாத்தியம் என்ற கேள்வி ஒரு புறம் இருக்கட்டும். அப்படியே அத்தனை கோடிகளில் தொழிற்சாலைகள் தமிழகத்தில் அமைக்கப்படுகிறது என்றே வைத்துக்கொள்வோம். அந்த தொழிற்சாலைகளுக்கு.. அடிப்படை தேவைகளுள் ஒன்றான மின்சார வசதி போதுமான அளவு கிடைக்குமா?
தமிழகத்தின் மின்சார நிலவரம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.
தமிழகத்தின் தற்போதைய மொத்த மின்சார தேவை 12 ஆயிரத்து 500 மெகாவாட் ஆகும். ஆனால் நமது உற்பத்தித் திறன் 18 ஆயிரம் மெகாவாட். இது மகிழ்ச்சியான விசயம்தான்.ஆனால் நிறைய தொழிற்சாலைகள் வந்தால் அவை அத்தனைக்கும் தேவையான மின்சாரத்தை கொடுக்க முடியுமா என்பதையும் பார்க்க வேண்டும்.
ஆனால் மின்னுற்பத்தியில் குளறுபடிகள் இருக்கின்றன. குறிப்பாக அனல் மின் உற்பத்தியில் நிலவும் கோளாறுகளை சரி செய்ய வேண்டும். இன்னொரு புறம், காற்றாலை மின்னுற்பத்தி அதிகம் இருந்தாலும் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள மின் தடவசதிகளை மேம்படுத்த வேண்டிய நிலையே உள்ளது.
உலகெங்கும் சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தியில் நாட்டம் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் இந்தத் துறையில் எந்த அளவுக்கு ஈடுபாடு இருக்கிறது என்பது கேள்விக்குறிதான்.
ஆகவே இனியேனும் மின் உற்பத்தியில் கூடுதல் கவனம் செலுத்தி அதிகரிக்க தமிழக அரசு ஆவண செய்யவேண்டும்.
அதே போலத்தான் தண்ணீர் வசதியும். விவசாயத்துக்கே தண்ணீர் பற்றாக்குறை. மூன்றுபோகம் அறுவடை செய்த காவிரி படுகை பகுதியில் இப்போது ஒருபோகம் நெல் விளைவிப்பதே சிரமமாக இருக்கிறது.
உடனே, “கர்நாடகம் தண்ணீர் தர மறுக்கிறதே” என்பார்கள். அது ஒருபக்கம் இருக்கட்டும். தமிழகத்துக்கு வரும் தண்ணீரை சேமித்து வைக்கும் வழிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகின்றனவா? ஏரி குளங்கள் அணைகளை தூர்வாராததால், பல டி.எம்.சி. தண்ணீர் கடலில் வீணாக கலக்கிறது. கடந்த வருட மழைக்காலத்திலும் இதைப் பார்த்தோம்.
இந்த நிலையில் புதிய ஆலைகள் வந்தால், அதற்கான நீர் தேவையை தமிழக அரசு எப்படி பூர்த்தி செய்ய்போகிறது என்பது முக்கியமான கேள்வி.
இனியேனும் போர்க்கால அடிப்படையில் நீர் நிலைகளை தூர்வாரி, நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இன்னொரு முக்கியமான விசயம்… தொழிற்சாலைக்கு தேவைப்படும் நிலங்களை பெறுவது. தமிழகம் முழுதுமே ரியல் எஸ்டேட் தொழில் கொடிகட்டி பறக்கிறது. அதே நேரம் இதில்தான் அதிக பண முறைகேடுகளும் நடக்கின்றன. ஆகவே தொழிற்சாலை அமைக்க விரும்புபவர்களுக்கு அரசே நேரடியாக தலையிட்டு நிலங்களை ஒதுக்க வேண்டும். அரசு என்பதிலும் மாண்புமிகுக்கள் இருப்பார்கள். அவர்கள் ஆதாயத்தை எதிர்பார்த்து குழப்பத்தை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும்.
இதற்கு தமிழக அரசு உறுதி கொடுக்க வேண்டும்.
இந்த மூன்று விசயங்ளை செய்யவில்லை என்றால், இந்த மூதலீட்டாளர் மாநாட்டால் எந்த பிரச்சினையும் இல்லை.
ஆகவே முதலீடுகளை ஈர்ப்பது பெரிய விசயம் அல்ல. அதன் மூலம் உருவாகும் தொழிற்சாலைகளுக்கு தேவையான வசதிகளை செய்துதரவேண்டும். இல்லாவிட்டால் அந்த தொழிற்சாலைகள் வராது.வந்தாலும் நிலைக்காது. அதற்கு ஏற்கெனவே உதாரணங்கள் இருக்கின்றன.” என்றார் அந்த தொழிலதிபர்