மகாமக கோயில்களை தரிசிக்கலாம் வாருங்கள்: முனைவர் ஜம்புலிங்கம்

 

மகாமகத்தின்போது மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி காணும் 12 சைவக் கோயில்களில் இதுவரை ஐந்து கோயில்கள் பார்த்துள்ள நிலையில் ஆறாவது கோயிலுக்குச் செல்வோம்.

26.10.2015 அன்று கும்பகோணத்தில் பல கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றது. அக்கோயில்களில் தீர்த்தவாரி சைவக்கோயில்களான அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், பாணபுரீஸ்வரர், கம்பட்ட விஸ்வநாதர் கோயில்களுக்கும், காவிரியில் தீர்த்தவாரி வைணவக்கோயில்களில் ஒன்றான வராகப்பெருமாள் கோயிலுக்கும் சென்றோம். இப்பயணத்தில் நாங்கள் சென்ற கோயில்களில் இதுவரை மூன்று சிவன் கோயில்களைப் பார்த்த நிலையில் இப்பதிவின் வழியாக இதே நாளில் குடமுழுக்கு கண்ட நான்காவது கோயில் கம்பட்ட விஸ்வநாதர் கோயில்.

 

1 (1)

 

தஞ்சாவூர் கும்பகோணம் சாலையில் கும்பேஸ்வரர் கோயிலுக்குத் தென்மேற்கு திசையில், மௌனசுவாமி மட வளைவுக்கு அருகே இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு அருகிலுள்ள அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில் நான் படித்த நிலையில் (1972-75) இக்கோயிலுக்கு பல முறை சென்றுள்ளேன். கோயிலின் நுழைவாயிலைக் கடந்து உள்ளே சென்றால் கொடி மரம், பலிபீடம், நந்தியைக் காணமுடியும்.

 

2 (1)

3 (1)

அதற்கு அடுத்து உள்ளே செல்லும்போது அழகான ராஜகோபுரத்தைக் காணலாம். ராஜகோபுரத்திற்கு அடுத்துள்ள மண்டப முகப்பில் இறைவன், இறைவியும் காளையின் முன்பாக அமர்ந்த கோலத்தில் உள்ளனர். அருகே விநாயகரும் முருகனும் உள்ளனர். பிரளய காலத்தில் அமுத கும்பத்திலிருந்த மாலை இங்கு விழுந்ததால் இத்தலத்தை மாலதிவனம் என்றழைக்கின்றனர். முகப்பின்கீழே மாலதி வனம் என்று எழுதப்பட்டிருந்தது.

 

 

கருவறையில் கம்பட்ட விஸ்வநாதரைத் தரிசித்தோம்.  தஞ்சாவூரையும், பழையாறையையும் சோழர்கள் தலைநகரங்களாகக் கொண்டு ஆட்சிசெய்த காலத்தில் இங்கு பொற்காசு அடிக்கும் நிலையங்கள் (கம்பட்டம் என்றால் பொன், வெள்ளி நாணயங்கள் அடிக்குமிடம் என்று பொருள்) இருந்ததால் மூலவரை கம்பட்ட விஸ்வநாதர் என்றழைக்கப்படுவதாக அறிந்தோம். பின்னர் இறைவியைத் தரிசித்தோம். பின்னர் கும்பாபிஷேகம் கண்ட இரு விமானங்களையும் கண்டோம். 

 

55 (1)6 (1)7 (1)8 (1)

இக்கோயில் திறந்திருக்கும் நேரம் காலை 6.00-12.30, மாலை 4.00-8.30


கம்பட்ட விஸ்வநாதரைத் தரிசித்த பின்னர் தஞ்சாவூருக்குக் கிளம்ப ஆயத்தமான போது அருகில் உள்ள, அதே நாளில் கும்பாபிஷேகம் ஆன திரௌபதியம்மன் கோயிலுக்குச் சென்றோம். கும்பகோணத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.  திரௌபதியம்மனை தரிசித்துவிட்டு மன நிறைவுடன் கிளம்பினோம்.

9 (1)

 10

மகாமகத்தில் தீர்த்தவாரி கொடுக்கும் சைவக்கோயில்கள்

·                     காசி விஸ்வநாதர் கோயில் (நவகன்னியர் அருள்பாலிக்கும் இடம்)

·                     கும்பேஸ்வரர் கோயில் (அமிர்தகலசத்திலிருந்து குடமூக்கு தங்கிய இடம்)

·                     நாகேஸ்வரர் கோயில் (வில்வம் விழுந்த இடம்)

·                     சோமேஸ்வரர் கோயில் (உறி விழுந்த இடம்)

·                     கோடீஸ்வரர் கோயில், கொட்டையூர் (அமிர்தத் துளிகள் விழுந்த இடம்)

·                     காளஹஸ்தீஸ்வரர் கோயில் (சந்தனம் விழுந்த இடம்)

·                     கௌதமேஸ்வரர் கோயில் (பூணூல் விழுந்த இடம்)

·                     அமிர்தகலசநாதர் கோயில், சாக்கோட்டை (கலச நடுப்பாகம் விழுந்த இடம்)

·                     பாணபுரீஸ்வரர் கோயில் (வேடுவ உருவில் சிவன், பாணம் எய்த இடம்)

·                     அபிமுகேஸ்வரர் கோயில் (தேங்காய் விழுந்த இடம்)

·                     கம்பட்ட விஸ்வநாதர் கோயில் (புஷ்பங்கள் விழுந்த இடம்)

·                     ஏகாம்பரேஸ்வரர் கோயில் (மற்ற உதிரி பாகங்கள் விழுந்த இடம்)