பாரதி சுப்பராயன் அவர்களின் முகநூல் பதிவு
a
ரண்டே இரண்டு விஷயங்கள் நடந்தால் இந்நாட்டு அரசியலில் மிகப்பெரிய மாற்றம் நடக்கும் என்று நம்புகிறேன்.
ஒன்று மக்கள் செய்ய வேண்டியது. மற்றொன்று தேர்தல் கமிசன் செய்ய வேண்டியது.
முதலில் மக்கள் செய்ய வேண்டியது.

வாக்களிப்பது நம் கடமை, உரிமை என்பதையெல்லாம் தாண்டி சரியான வேட்பாளருக்கு வாக்களிப்பது தான் காலத்தின் தேவை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
சாதி, மதம் சார்ந்து அரசியல் நடத்துபவர்களுக்கு ஓட்டுப் போடக் கூடாது. பொது அறிவு, பரந்த சிந்தனை மற்றும் தொலைநோக்கு பார்வை இன்மையால் தான் ஒருவன் சாதி வெறியனாகவோ மத வெறியனாகவோ ஆகிறான். ஒரு அரசியவாதிக்கு தொலைநோக்கு பார்வையும் பரந்த சிந்தனையும் மிக அவசியம். அதனால் இவர்களை புறக்கணிக்க வேண்டும்.
இரண்டாவது, கட்சிக்கோ தலைவர்களுக்காகவோ ஓட்டுப் போடக்கூடாது. ஒரு டிவி வாங்குவதாக இருந்தாலோ ஒரு பிரிட்ஜ் வாங்குவதாக இருந்தாலோ ஒவ்வொரு பிராண்டின் சாதக பாதகங்களை ஆராய்ச்சி செய்து அதை உபயோகிப்பவர்களிடம் விசாரித்து பின் எது சிறந்தது என்று நாம் நினைக்கிறோமோ அதை வாங்குவோம். அதே போல் உங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களையும் ஆராய்ச்சி செய்து அவர்களில் யாருக்கு அடிப்படை நேர்மை, அரசியல் ஞானம், பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தொலைநோக்குப் பார்வை போன்றவை இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களோ அவர்களுக்கு ஓட்டுப்போட வேண்டும். கட்சிக்கோ தலைமைக்கோ ஓட்டுப் போடுவதால் தான் தகுதியற்ற வேட்பாளர்கள் சபைக்கு செல்கிறார்கள். தகுதியான வேட்பாளர்களுக்குத் தான் ஓட்டுப்போடுவேன் என்பதை மக்கள் அரசியல் கட்சிகளுக்குப் புரியவைப்பார்களேயானால், ஒவ்வொரு கட்சியும் போட்டி போட்டுக்கொண்டு நேர்மையான வேட்பாளர்களை களம் இறக்குவார்கள். இது தகுதியான வேட்பாளர்கள் தேர்வாக உதவும். அப்படித் தேர்வான வேட்பாளர்களில் இருந்து உருவாகும் தலைவரும் தரமானவராக இருப்பார்.
அடுத்து தேர்தல் கமிசன் செய்ய வேண்டியது.
எந்த வேட்பாளரையும் பிரச்சாரம் செய்ய அனுமதிக்கக் கூடாது. வேட்பாளர்களது பிரசாரத்தை தேர்தல் கமிசனே முன்னின்று நடத்த வேண்டும். டிவிக்களில் ரேடியோக்களில் ஸ்லாட் ஒதுக்குவது, ஒவ்வொரு தொகுதிக்கும் குறிப்பிட்ட அளவிலான பொதுக்கூட்டங்களை ஏற்ப்பாடு செய்வது, வேட்பாளர் தனது பிரசங்கங்களடங்கிய போஸ்டர்களை வைப்பதற்கு பொது வெளிகளில் இடம் ஒதுக்குவது போன்றவற்றால் இதை செய்யலாம்.
தேர்தலில் செலவு செய்தவன், தான் போட்ட பணத்தை வட்டியும் முதலுமாக எடுக்க நினைக்கிறான், கட்சிக்கு பணம் கொடுக்கும் கார்பரேட்டுகள் தான் போட்ட காசுக்காக சட்டத்தை வளைக்க முற்படுகிறார்கள். இதுவே ஊழலின் முதல் ஊற்றுக்கண். கட்சிகளும் செலவு செய்யும் வேட்பாளர்களே தனக்கு வேண்டும் என்று, தகுதியான, திறமையான வேட்பாளர்களை புறம்தள்ளி விட்டு, பணம் மட்டுமே படைத்த தகுதியற்ற திறமையற்ற வேட்பாளர்களை களமிறக்குகிறார்கள். தேர்தல்கமிசனே பிரசாரத்தை ஏற்ப்பாடு செய்யும் பட்சத்தில் இது போன்ற ஊழல் காரணிகளை முளையிலேயே கிள்ள முடியும்.
ஆக, இந்தத் தேர்தலிலாவது ஓட்டுப் போடுவது மட்டுமே நமது கடமை என்று திருப்திப்படாமல், சரியான வேட்பாளருக்கு ஓட்டுப்போடுவது தான் தீர்வு என்பதை உணர்வோம்.
தேர்தல் கமிஷம் செய்யவேண்டியது நம் கையில் இல்லை. ஆனால் நமது கடமையை ஆரம்பிப்பதற்க்கு எந்தத் தடையும் இல்லை.
அதனால் தகுதியான வேட்பாளருக்கே வாக்களிப்போம். மாற்றத்தை நம்மில் இருந்து ஆரம்பிப்போம்.