குழந்தைத் தொழிலாளியாக இருந்து ஐ.ஆர்.எஸ். அதிகாரியாக உயர்ந்தவர்!

Must read

q
 
குழந்தைத் தொழிலாளியாக இருந்த ஒரு சிறுவன், கடினமாக  உழைத்து படித்து, ஐ.ஏ.எஸ்ஸூக்கு இணையான ஐ.ஆர்.எஸ். தேறி…  வருமானவரித் துறை அதிகாரியாக ஆவது என்றால் சும்மாவா?
திண்டுக்கல் ஜிடிஎன் கல்லூரியில் நடந்த 47-வது பட்டமளிப்பு விழாவில் திருச்சி மண்டல வருமானவரித் துறை இணை ஆணையர் வி. நந்தகுமார் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர், “குழந்தைத் தொழிலாளி என்ற சொல் தற்போது சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது. நானும், ஒரு குழந்தைத் தொழிலாளியாக வாழ்ந்தவன்தான். குடும்ப வறுமை காரணமாக,  ஆறாம் வகுப்புடன் பள்ளியை விட்டு நின்றுவிட்டேன்.  கூலி வேலைக்குச் சென்றேன்.
மற்ற குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை பார்க்கும்போது, கல்வியின்  முக்கியத்துவத்தை உணர்ந்தேன்.  அதனால், படிப்பை விடவே கூடாது என்று சபதம் எடுத்தேன்.  கூலி வேலைக்குச் சென்றுகொண்டே தனித்தேர்வாக  பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றேன்.
அடுத்ததாக, கல்லூரியில் சேர முயன்றேன். ஆனால்,  பள்ளிகள் மூலம் நேரடியாக தேர்ச்சி பெறவில்லை என்ற காரணம் கூறி என்னை புறக்கணித்தனர். 12 தனியார் கல்லூரி படிக்கட்டுகளில் ஏறியும், யாரும் எனக்கு படிக்க வாய்ப்பு அளிக்கவில்லை. கடைசியில் அரசுக் கல்லூரி ஒன்றில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. வைராக்கியத்துடன் பட்டப்படிப்பை முடித்தேன்.
குழந்தைத் தொழிலாளியாக இருந்த நான், இன்று ராணுவம், கூட்டுறவு இணைப் பதிவாளர் என அரசின் பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்து விட்டேன்.  2013ஆம் ஆண்டு மத்திய அமைச்சக செயலாளராக இருந்தபோது, குடியரசுத் தலைவருடன் பணியாற்றும் வாய்ப்பும் எனக்குக்  கிடைத்தது.
என்னாலேயே இந்த அளவுக்கு படித்து உயர முடியும் என்றால்  பள்ளி கல்லூரிகளில் படிக்கும் நீங்கள் இன்னும் எவ்வளவோ சாதிக்கலாம்” என்று  நந்தகோபால் பேசி முடித்தபோது, மாணவர்களின் கைதட்டல் அடங்க வெகுநேரம் ஆனது.
 

More articles

Latest article