மாதொரு பாகன்
காதலர் தினம் கொண்டாடினீரா?
Zahir Hussain R Sharbudeen
“பெண்களை கொச்சைப்படுத்துகிறது” என்று இந்துத்துவாதிகள் கொதித்தெழுந்து எரித்தார்களே… மாதொருபாகன் நாவல்.. நினைவிருக்கிறதா? அதாவது, குழந்தைப்பேறு இல்லாத பெண்கள், திருவிழா இரவு நேரத்தில் முகம் அறியாத யாரோ ஒருவனுடன் உறவுகொண்டு கற்பமாகும் பழக்கம் இருந்ததை சொல்லும் கதை.
அந்த சமயத்தில், நண்பர் ஒருவர், “யாரோ முகம் தெரியாத நபருடன் உறவுகொண்டு குடும்ப் பெண்கள் பிள்ளை பெற்றதாக எழுதப்பட்டதால்தான் மாதொரு பாகன் நாவலை எதிர்க்கிறோம். தன் பிள்ளைக்கு அப்பன் யாரென்றே தெரியாத நிலை ஒரு பெண்ணுக்கு ஏற்படலாமா” என்றார்.
அதற்கு நான், “”ஏற்கெனவே அப்படி நடந்ததா இல்லையா என்பது ஒரு புறம் இருக்கட்டும். எழுதியதற்கே எதிர்க்கிறீர்கள் என்றால், விந்து தானம் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கும்கூட, தங்கள் பிள்ளையின் தகப்பனை அறிய முடியாதே. அதை எப்படிப் பார்க்கிறீர்கள்” என்றேன்.
“அது நவீன அறிவியலின் வெளிப்பாடு. அதில் குறிப்பிட்ட ஆணும் பெண்ணும் உறவு கொள்வதில்லையே…” என்றார்.
“சந்ததியைப் பெருக்குவது உயிர்களின் அடிப்படை தன்மை. அதன் பொருட்டே காமம். காமத்தின் வெளிப்பாடே காதல்.
சந்ததியைப் பெருக்க பெண் வேண்டும். ஆனால் காமத்திலோ, காதலிலோ அவள் சுகித்துவிடக்கூடாது. இதுதானே ஆண்களின் (பெரும்பாலான) எண்ணமாக இருக்கிறது?”  என்றேன். .
நண்பர் பதில் சொல்லவில்லை.
இந்த லட்சணத்தில் ஆண் – பெண் “காதலை”ச் சொல்லும் காதலர் தினம் ஒரு கேடா?
 

வாரணாசி
வாரணாசி

இந்தியாவின் தூய்மையான நகரங்களில் மூன்றாவது இடத்தை  திருச்சி பெற்றிருக்கிறதாமே.. இது மோடியின் வெற்றிதானே..!
Berlin Jose  
சமீபத்தில்கூட திருச்சி சென்றுவந்தேன். எனக்குத் தோன்றுவது இதுதான். திருச்சிக்கே மூன்றாவது மற்ற நகரத்தின் நிலை  ரொம்பவே பரிதாபம்தான்.
இன்னொரு விசயம்… இந்திய அளவில் மிக அழுக்கான நகரங்களில் முதல் பத்து இடங்களில் ஒன்று மோடியி்ன் வாரணாசி!  இதுவும் மோடியின் “வெற்றியா? 
 வைகோ
கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் பெரியார், அண்ணா பெயரைச் சொன்னாலும், திராவிட கட்சிகள் என்று சொல்லிக்கொண்டாலும் கடவுள் பக்தி விசயங்களில் நம்பிக்கை உடையவர்கள்தான்.  ஆனால் வைகோதான் உண்மையான பெரியார் பற்றாளர். பகுத்தறிவுவாதி” என்கிறான் என் நண்பன். சரிதானே?
துரை ஆனந்த்
ஜெயலலிதாவின் வெளிப்படையான பக்தி, ஜோதிட நம்பிக்கைளும், கருணாநிதியின் மறைமுகமான நம்பிக்கைளும் உங்கள் நண்பரை இந் முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாம்.
தான் பேசும் பொதுக்கூட்டங்களில் எல்லாம் ராமாயணம் மகாபாரதம் என்று உதாரணங்களை சரமாரியா எடுத்துவிடுகிறார்  வைகோ. சமீபத்தில் அவர் பேசிய தஞ்சை கூட்டத்துக்கு சென்றிருந்தேன். மகாபாரத போர்க்காட்சிகளை, அத்தனை தத்ரூபமாக விவரித்தார். ஒரு தேர்ந்த உபன்யாசகர் கூட, இவ்வளவு சுவையாக, விரிவாக அந்த மகாபாரத காட்சிகளை விவரித்திருக்க முடியாது. கூட்டம் அத்தனை ரசிப்பாகக் கேட்டுக்கொண்டிருந்தது.
இப்படி மகாபாரதத்தை மேலோட்டமாக மட்டுமே அறிந்திருக்கும் வாய்ப்புள்ளவர்களிடம் ஆழப்பதிக்கிறார் வைகோ.
அவர் பின்பற்றுவதாகக்கூறும் தந்தை பெரியார், மகாபாரதம் பற்றி என்ன கூறியிருக்கிறார் தெரியுமா?
” வர்ண (சாதி)  அமைப்பை வலியுறுத்துகிறது.  வன்முறையைத் தூண்டுகிறது.  தத்துவக் குழப்பங்கள் கொண்டது!”  என்கிறார் தந்தை பெரியார்.
சரி, ஏதோ உதாரணங்களுக்காகத்தான் வைகோ சொல்கிறார் என்று சமாதானப்படுத்திக்கொள்ளலாம்தான். ஆனால், உலக வரலாறுகளை எல்லாம் அறிந்தவர் அவர். நடந்ததா இல்லையா என்ற சர்ச்சைக்குரிய புராணங்களை ஏன் பயன்படுத்த வேண்டும் என்கிற கேள்வியும் எழுகிறது!
தவிர வைகோவின் தொண்டர்கள் பலர், சாதி மத, ஜோதிட அபிமானிகளாக, இருப்பவதை சமூகவலைதளங்களை பார்த்தாலே தெரிந்துகொள்ளலாம்.
வேறு என்ன சொல்வது?
 
கருத்து கணிப்பு
 
கருத்துகணிப்பு நடத்த அடிப்படை தேவை என்ன?
சிவானந்தன் சிவா
ஒரு பேப்பர், ஒரு பேனா, ஒரு “கிறுகிறு” மூளை!
 
ஜெயலலிதா மோடி
அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி ஏற்படும் என்பது எத்தனை சதவிகிதம் லாஜிக்கானது?
கர்ணன் சென்னை
தற்போது, தமிழகத்துக்கு 1700 கோடி ரூபாய் வறட்சி நிதி அளித்துள்ளது மத்திய அரசு. சமீபத்திய வெள்ள சேதத்தை அடுத்து  தமிழக அரசு வெள்ள நிவாரண நிதி  கேட்டிருக்கும்  நிலையில், எப்போதோ கேட்ட வறட்சி நிவாரணம் இப்போது வந்திருக்கிறது.
தவிர, சட்டமன்றத்திலேயே “எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்லக்கூடாது” என்கிறார் அ.தி.மு.க. மூத்த அமைச்சர்.
இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது, அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி உறுதியாகிவிட்டதோ என்று தோன்றுகிறது.
 
 
1940களில் லண்டன்
1940களில் லண்டன்

சமீபத்தில் உங்களை பாதித்த சம்பவம்?
கே.எஸ். ராமசுப்ரமணியன்
சம்பவம் இல்லை..  பேச்சு.  இங்கிலாந்தில் வசிக்கும் நண்பர் ரவி சுந்தரத்திடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் கூறியது இது:
“1940கள் வரை இங்கிலாந்தின் கிராமத்து சிறுவர்கள் பகலில் பாதி நேரம் பள்ளிக்கும் மீதி நேரம் கூலி வேலைக்கு சென்று பஞ்சம் பிழைத்தனர்.
பெருமளவு ஏழைகள் மலிந்து காணப்பட்டனர். ஒரு அறையில் சர்வசாதாரணமாக 8 பேர் வரை குடியிருந்தனர். சுகாதாரம் படு மோசமாக இருந்தது.
காச நோய் பல பேரை கொன்றது.
1950களில் கூட இங்கிலாந்தின் பெருவாரியான கிராமங்களில் உள்ள வீடுகளில் கழிப்பிடங்கள் வீட்டுக்கு வெளியேத்தான் இருந்தன.
முக்கால்வாசி கிராமங்களில் மின் விளக்குகள் அரிது.
1961ல் தான் இங்கிலாந்தின் முதல் MOTOR WAY எனப்படும் இருவழிப்பாதை போடப்பட்டது.
இரண்டாம் உலக போரில் நொறுங்கி போயிருந்தது ஐரோப்பா. எனவே மேற்கூறிய நிலைதான் பல் வேறு ஐரோப்பிய நாடுகளில் இருந்தது.
இன்று அதே ஐரோப்பிய நாடுகள் எங்கிருக்கின்றன என்று பாருங்கள்
இன்று எல்லோருக்கும் இலவச மருத்துவ வசதி
அடிப்படை மருத்துவ வசதி இல்லாத கிராமங்களே கிடையாது. 
காச நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. . 
சாலை வசதி பெறாத ஊர்களே கிடையாது.
மின்வசதி நிலையாக எல்லோருக்கும் உண்டு.
இன்று அனைத்து ஊர்களிலும் பள்ளி இறுதிவரை கல்வி இலவசம். 
10 ஆண்டுமுன்பு வரை பட்ட மேற்ப்படிப்பு வரை இலவசம். ஜெர்மனியில் இப்போதும் இலவசமே.
முதியோருக்கான ஓய்வுதியம் மட்டுமன்றி முதியோர் இல்லங்களுக்கு அரசு பணம் தந்து பராமரிக்கிறது.
இன்னொரு உதாரணம் ஜப்பான். 
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
சரி…நாம் சுதந்திரம் அடைந்தது 1947ல்..
1961ல் என்ன செய்தோம். ?
1981ல் என்ன செய்தோம்?
1970க்கு பிறகு எப்படி திசை மாறி போனோம்.?
2016ல் உங்கள் ஊருக்கு பொதுக் கழிப்பிடம் கட்டிதருகிறேன் என்று வாக்குறுதி தந்து ஒட்டு கேட்க வேண்டிய நிலையில்தான் நாம் இன்னமும் வைக்கப்பட்டிருக்கிறோம் என்பது எத்தகைய அவலம். ?
கழிப்பிடம் இல்லாத பெண்கள் மற்றும் ஆண்கள் பள்ளிகள் எத்தனை எத்தனை?
கடந்த 50 ஆண்டுகளில் உலக நாடுகள் தம் மக்களுக்காக நாலு கால் பாய்ச்சலில் செயலாற்றி அடிப்படை வசதிகளை நிறைவேற்றி வளர்ச்சி கண்டு வரும் வேளையில் நாம் இன்னமும் பராரிகளாய் இருப்பது 
கேவலம் இல்லையா?
ஒரு இந்தியனாய் ஒரு தமிழனாய் வெட்கப்படுங்கள்!”
 
download
 
 ராமண்ணாவுக்கு புரியாத விசயம் எது?
ஸ்ரீராம் செல்வராஜ்
பல விசயங்கள் புரிவதில்லை. தற்போது மனதைக் குடைவது  எது தேசபக்தி என்ற கேள்வி.
இங்கே தேசபக்தி என்பது நாட்டின் இடத்தை (நிலத்தை), ராணுத்தை மையப்படுத்தி பேசப்படுகிறது. ஆனால் நாட்டின் இடத்தைக் காக்கும் ராணுவ விவகாரங்களில் ஊழல் செய்தவர்கள், தேசபக்தர்களாக கொண்டாடப்படுவதும் இங்கேதான் நடக்கிறது. ஒன்றும் புரியவில்லை.
 
விஜயகாந்த்தை சந்தித்த டிராபிக் ராமசாமி, “தனித்து போட்டியிடுங்கள் என்னைப் போன்றவர்கள் உங்களதைத்தான் ஆதரிப்போம்” என்று வலியுறுத்தி இருக்கிறாரே! அவர் சொல்வதைக் கேட்பாரா விஜகாந்த்?
ஜான்சன் கோவை
ஹா.. ஹா! டிராபிக் ராமசாமி ஆதரிக்கலாம்! ஆனால் டிராபிக் ராமசாமியை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் எத்தனை பேர் ஆதரித்தார்கள் என்பது விஜகாந்துக்கு தெரியாதா? தவிர, விஜயகாந்தின் “கணக்கு” வேறு என்பது நமக்குத் தெரியாதா என்ன?
 
 download (1)
வாட்ஸ்அப் போன்ற சமூகவலைதளங்கள் வந்திருப்பது சமுதாய முன்னேற்றத்துக்கு உதவும்தானே?
சித்தானந்தன் நெய்வேலி
ரத்தம் தேவை போன்ற விசயங்கள் சமூகவலைதளங்கள் மூலம் பதியப்படும்போது பலன் இருக்கிறது. ஆனால், “கோலம் போடுவதால், விண்வெளி கிரகங்களின் செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்படுகின்றன” என்பது போன்ற  பொய்கள் பரப்பப்படுகின்றன.  தவிர, அதே சமூகவலைதளங்களில்தான் அக்கப்போர் விசயங்கள் அனைத்தும் பரபப்படுகிறது.  நேற்றுகூட அமைச்சர் ஒருவரின் அந்தரங்கம் என்று சில படங்கள் வைரலாக பரவின.
ஆனால், தனது ஆட்டோவில் பயணம் செய்தவருக்கு திடீரென உடல் நலம் குன்ற,  தனது ஆட்டோவை அடமானம் வைத்து வைத்தியம் பார்த்தார் ஆட்டோ ஓட்டுனர் ரவி. இது நடந்தது கடந்த டிசம்பர் மாதம். இந்த செய்தி சமீபத்தில்தான் சமூகஊடகங்கள் மூலம் வெளியே வந்தது.
ஆக, நவீன தொழில்நுட்பங்களால் மட்டும் சமுதாயம் முன்னேற்றம் அடைந்துவிடாது. அதை எப்படி ஒரு சமுதாயம் பயன்படுத்துகிறது என்பதிலேயே முன்னேற்றம் ஏற்படும்.
அந்த வகையில் நாம் பெயில்!
 
விவசாயி தற்கொலை கோபால்
 
மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க.  பாராளுமன்ற உறுப்பினர் கோபால் ஷெட்டி, “தற்கொலை செய்து கொள்வது  விவசாயிகளுக்கு  ஒரு பேஷனாகப் போய்விட்டது” என்று கூறியிருக்கிறாரே! இதிலிருந்து என்ன தெரிகிறது?
ராமகிருஷ்ணன் மலேசியா
அங்கே தேர்தல்வர இன்னும் நாள் இருக்கிறது என்பது தெரிகிறது.