திரைக்கு வராத திரையுலக உண்மைகள் :  10
 

ஸ்ரீராம் செல்வராஜ் எடுத்து வார இதழ் ஒன்றில் அட்டைப்படமாக..
ஸ்ரீராம் செல்வராஜ் எடுத்து வார இதழ் ஒன்றில் அட்டைப்படமாக..

என்னதான் உச்ச நட்சத்திரமாக இருந்தாலும், நிற்க நேரமில்லாமல் பரபரப்பாக தனது பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தாலும், தன்னைச் சுற்றி நடக்கும் விசயங்களை கூர்ந்து கவனித்துக்கொண்டே இருப்பார் ரஜினி.
உதாரணமான ஒரு சம்பவம்…
அது 1990களின் ஆரம்ப காலம். இப்போது போல வருடத்துக்கு அல்லது இரண்டு வருடத்துக்கு ஒரு படம் என்று ரிலாக்ஸ்டாக இல்லாமல், பரபரவென ஒரே நேரத்தில்  ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் ரஜினி நடித்துக்கொண்டிருந்த நேரம்.
 
ரஜினியுடன்
ரஜினியுடன்

ஏவி.எம். ஸ்டூடியோவில் ரஜினி நடிக்கும் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது. சில போட்டோகிராபர்கள், அந்த  ஏவி.எம். ஸ்டுடியோவுக்குள், நுழைகிறார்கள்.
ஏவி.எம், வாஹினி என்று ஸ்டுடியோ ரவுண்ட்ஸ் அடிப்பதும், அங்கு  நடக்கும் படப்பிடிப்புகளில் கலந்துகொள்ளும் நட்சத்திரங்களை படம் பிடித்து பத்திரிகைகளுக்கு தருவதும் அவர்களது வழக்கம்.
ஸ்டூடியோவின் ஒரு தளத்தில்  ரஜினி படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது.  மற்ற தளங்களில்  புது முகம் அல்லது சாதாரண நடிகர்கள் நடிக்கும் வேறு படங்களில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தன.
ரஜினியை படம் எடுக்க வேண்டும் என்று, அவர் நடிக்கும் தளத்துக்குச் சென்றார்கள், இந்த போட்டோகிராபர்கள்.   கையில் கேமராவுடன் வந்த இந்த கும்பலை பார்த்தவுடனேயே ரஜினி டென்சன் ஆகிவிட்டார். அவரது முகத்தில் எள்ளும் கொள்ளும் என்பார்களே..  அது உட்பட கடுகு, உளுந்தம்பருப்பு எல்லாமும் வெடித்தது.
அவரைச் சொல்லியும் குற்றமில்லை. நாள் முழுதும்  கேமரா முன் நடிக்கிறார். இதற்கிடையே  பல பத்திரிகைகளின் புகைப்படக்காரர்கள் அடிக்கடி  வந்து “போஸ் கொடுங்க..” என்று வாட்டி எடுத்து விடுகிறார்கள். தவிர ரசிகர்களின் அன்புத்தொல்லை வேறு.
கேமிராக்காரர்களைப் பார்த்து, “இன்னொரு நாள் வாங்க…”  என்று சைகையிலேயே சொல்லிவிட்டார் ரஜினி.  ஏமாற்றத்துடன் திரும்பினார்கள் புகைப்படக்காரர்கள்.  வேறென்ன செய்வது.. ரஜினியின் (அப்போதைய)  கோபம்தான் அனைவரும் அறிந்த விசயமாயிற்றே!
திரும்பிய அத்தனை புகைப்படக்காரர்களுக்கும் வருத்தம் என்றாலும், குறிப்பாக ஒருவருக்கு மிக வருத்தம்.  மற்ற புகைப்படக்காரர்களுக்கு ஏமாற்றம் மனதில் மட்டும்தான். இவருக்கு வயிற்றிலும் ஏமாற்றம்!
ஆமாம்…  மற்றவர்கள்  வேறு நல்ல பணிகளில்  இருந்தார்கள். ஒரு ஆர்வத்தில் போட்டோ எடுத்து பத்திரிகைகளுக்கு அளித்து வந்தார்கள்.  ஆனால் அந்த ஒரு போட்டோகிராபர் மட்டும் அப்படி அல்லை. அவர்  சில பத்திரிகைகளுக்கு ஃபிரீலேன்சர் போட்டோ கிராபராக புகைப்படங்கள் கொடுத்து வந்தார்.  கைப்படம் எடுத்து, பிரிண்ட் போட்டு.. ( இப்போது போல புகைப்படம் எடுப்பது அப்போது சுலபமல்ல. அது தனிக்கதை!)  பத்திரிகை அலுவலகத்தில் கொடுத்து, அதற்கான பணத்தை வாங்கினால்தான்  அவருக்கு  நிம்மதி.
அதாவது மற்றவர்களுக்கு புகைப்படம் எடுப்பது ஹாபி. இவருக்ககோ புகைப்படம் எடுத்தால்தான் ஒருவாய் காப்பியே குடிக்க முடியும்.
அதுவும் ரஜினி ஸ்டில் என்றால் பத்திரிகைகளில் தனி மவுசு. பிரிண்ட்டை கொடுத்ததும் பணம் கிடைத்துவிடும்.
ஆனாலும் என்ன செய்ய…
மற்ற புகைப்படக்காரர்கள்  தங்களது மோட்டார் வாகனத்தில் ஏறி.. சர்ரென கிளம்பி புகையையாய் பறந்துவிட்டார்கள்.  ஃப்ரீலேன்ஸ் பத்திரிகையாளரான அவரோ, தான் எடுத்து வந்த வாடகை சைக்கிளில் ஏறி அமர்ந்து ஏமாற்றத்துடன் மிதிக்கத்துவங்கினார்.
கொஞ்ச  தூரம்தான் வந்திருப்பார்…  ஏவி.எம். ஸ்டுடியோவின் வாசல் அருகில் அவர் வந்தபோது, ரஜினியின் உதவியாளர் ஜெயராமன்,  பின்னாலேயே ஓடி வந்து  அவரை அழைத்தார்.
இவர் சைக்கிளை விட்டு இறங்கி நிற்க..  அருகில் மூச்சிரைக்க வந்த ஜெயராமன், “ரஜினி சார் கூப்பிடுகிறார்” என்றார்.
இவருக்கு ஆச்சரியம். இப்போதுதான் திருப்பி அனுப்பினார்.. மறுபடி கூப்பிடுகிறாரே..!
மீண்டும்,  ரஜினி நடிக்கும் படப்பிடிப்பு தளத்துக்குச் சென்றார் அந்த புகைப்படக்காரர்.  ஷாட்டில் இருந்தார்.  வழக்கம்போல சைகையிலேயே வெயிட் பண்ணச் சொன்னார்.
காத்திருந்தார் இவர்.
 
ஸ்ரீராம் செல்வராஜ்
ஸ்ரீராம் செல்வராஜ்

ஷாட் முடிந்து வந்த ரஜினி, இந்த புகைப்படக்காரரை அழைத்தார்.  போஸ் கொடுக்க தயாரானார். அதற்கு  முன்பு, “… இனிமே கூட்டமா வராதீங்க.. நான் எங்கிருக்கிறேன் என்று கேட்டு தெரிந்துகொண்டு நீங்கள் மட்டும் வாருங்கள்..” என்றார்.
அதன் பிறகு அட்டகாசமான போஸ்களை கொடுத்தார். பாலைவனத்தில் அலைந்தவனுக்கு சோலையில்  தண்ணீர் கிடைத்தால் எப்படி பருகுவானோ அதுபோல  அந்த புகைப்படக்காரரின் கேமரா, ரஜினியின் வித்தியாசமான போஸ்களை ஆசை ஆசையாய்  படம் பிடித்து தள்ளியது.
ஆஹா.. போதும் என்று அந்த போட்டோகிராபருக்கே  தோன்றியது. அதே நேரம், ரஜினியும், “என்ன.. ஓகே வா..” என்று புன்னகைத்தார்.
“நன்றி சார்..” என்று நெகிழ்வுடன் செல்லி புறப்பட்டார் அந்த போட்டோ கிராபர்.
முதலில் அனைத்து புகைப்படக்காரர்களையும் திருப்பி அனுப்பிய ரஜினி, குறிப்பிட்ட அந்த போட்டோகிராபரை மட்டும் அழைத்தது ஏன்?
அந்த போட்டோகிராபரான ஸ்ரீராம் செல்வராஜே சொல்கிறார்.. கேளுங்கள்:
“ரஜினி  அனைவரையும்.. அனைத்தையும் கூர்ந்து கவனிப்பவர்.  என்னுடன் வந்த புகைப்படக் கலைஞர்கள், பொழுது போக்குக்காக படம் எடுப்பவர்கள் என்பதையும், நான் இதையே தொழிலாக வைத்திருக்கிறேன் என்பதையும் அறிந்திருக்கிறார் ரஜினி.
இத்தனைக்கும் அவர் உச்ச நட்சத்திரம்! நான் அப்போதுதான் புகைப்பட கலைஞன் ஆனாலும் என்னையும் கவனித்து, என் நிலையையும் சரியாக கணித்திருக்கிறார் ரஜினி! அன்றைக்கு நான் படம் எடுக்காவிட்டால்,  எனக்கு பணப்பிரச்சினை ஏற்படும் என்பதையும் உணர்ந்திருக்கிறார்…  ! அதனால்தான் ஆரம்பத்தில் டென்சனாக, புகைப்படக்காரர்களை திருப்பி அனுப்பியவர்,  பிறகு நினைவு வந்து என்னை மட்டும் மீண்டும் அழைத்து புகைப்படம் எடுக்க அனுமதித்தார்..! தனது வேலைப்பளு, டென்ஷன் ஆகியவற்றை மறந்து  புன்னகையுடன் விதவிதமாக போஸ் கொடுத்தார்!
அவர்தான் ரஜினி!”

  • நெகிழ்வுடன் சொல்லி முடித்தார் புகைப்படக்கலைஞர் ஸ்ரீராம் செல்வராஜ்.

(ரஜினி “பாபா”வை வணங்குவதும், பாபா குறித்து படம் எடுத்ததும் அனைவருக்கும் தெரியும். ரஜினிக்கு தெரிந்த இன்னொரு  பாபா இருப்பதும்.. சென்னையிலேயே   அந்த பாபா பணிபுரிவதும் இருப்பதும் தெரியுமா… ?
வரும் 05.02.16 வெள்ளிக் கிழமை வரை காத்திருங்கள்!)