1000 ரூபாய் மதிப்புள்ள உணவுக்கு வெறும் 200 – 300 ரூபாய் வாங்கிக்கொண்டு டெலிவரி செய்யும் ஜோமேட்டோ ஊழியர்களின் நூதன மோசடி.

இந்த புதுவிதமான மோசடி குறித்து வினய் சாத்தி என்பவர் தனது சமூக வலைப்பக்கத்தில் பகிர்ந்ததை அடுத்து ஜோமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் உள்ளிட்ட பலருக்கும் தெரியவந்துள்ளது.

பர்கர் கிங் உணவகத்தில் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்துவிட்டு தனது உணவுக்காக காத்திருந்த வினய் சாத்தி-க்கு ஆர்டர் செய்த அரை மணி நேரத்தில் டெலிவரி வந்தது.

உணவு டெலிவரி செய்ய வந்த ஜோமேட்டோ ஊழியர் “இனி நீங்கள் 700 – 800 ரூபாய்க்கு மேல் உணவு ஆர்டர் செய்வதாக இருந்தால் ஆன்லைன் பேமென்ட் கொடுப்பதை தவிர்த்து கேஷ்-ஆன்-டெலிவரியை தேர்ந்தெடுங்கள்” என்று கூறியுள்ளார்.

மேலும், “நீங்கள் அப்படி தேர்ந்தெடுத்தால் என்னிடம் 200 ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டு நீங்கள் உங்கள் ஆர்டரை பெற்றுக்கொள்ளலாம்” என்று கூறியுள்ளார்.

அதற்கு அதெப்படி வெறும் 200 ரூபாய் கொடுத்தால் உணவகம் ஏற்றுக்கொள்ளுமா ? என்று கேட்டதற்கு, “வாடிக்கையாளர் உணவு வேண்டாம் என்று மறுத்துவிட்டதாகக் கூறிவிடுவோம்” என்று கூறி அதிர வைத்திருக்கிறார்.

கேஷ்-ஆன்-டெலிவரி மூலம் ஜோமேட்டோ-வில் ஆர்டர் செய்யும் உணவுகளை வாடிக்கையாளர் வேண்டாம் என்று கூறிவிட்டதாகக் கூறி டெலிவரி ஊழியர்கள் பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றும் இந்த புதிய மோசடி குறித்து அவர் தீபிந்தர் கோயலுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

அதற்கு தீபிந்தர் கோயல் ஆம், இந்த மோசடி குறித்து எங்களுக்கு தெரியவந்துள்ளது இதனை தடுப்பதற்கான முயற்சியில் ஜோமேட்டோ கவனம் செலுத்திவருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.