மும்பை:

மும்பையை சேர்ந்தவர் பிரியங்கா ஜெட்டாலால் மாரு (வயது 32). வக்கீல். இவர் நேற்று காலை சூரி பகுதியில் கட்டப்பட்டு வரும் கட்டிடம் ஒன்றின் 18வது மாடிக்கு சென்றார்.

அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவை அவர் எடுத்திருந்தார். இந்த காட்சியை நேரலையாக படம் பிடித்து பேஸ்புக்கில் வெளியிடவும் அவர் முயற்சித்தார். பிரியங்காவில் செயல்பாட்டை அந்த கட்டடத்தில் அருகில் உள்ள குடியிருப்பை சேர்ந்த மற்றொருவர் பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

போலீசார் அடங்கிய குழு அங்கு விரைந்து வந்து பிரியங்காவின் தற்கொலை முயற்சியை கைவிட வலியுறுத்தினர். இது போன்ற சூழ்நிலைகளை கையாள பிரத்யேக திறன் பெற்ற போலிஸ் இன்ஸ்பெக்டர் ஷாலினி சர்மா, பிரியங்காவை தடுத்து நிறுத்தி கீழே அழைத்து வந்தார்.

போலீசார் அந்த பெண்ணை பரேல் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து அவருக்கு மனநல ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்தனர். இதேபோல் கடந்த மாதம் 23 வயதான கல்லூரி மாணவர் ஒருவர் பந்திராவில் ஒரு ஓட்டலின் 19வது மாடியில் இருந்து ஜன்னல் வழியாக குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த காட்சியைக அவர் வீடியோவாக பதிவு செய்து நேரலையாக பேஸ்புக்கிலும் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். தற்போது இது போன்ற ஒரு சம்பவம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.