டில்லி

ர்நாடக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் முதல்வர் எடியூரப்பா பேசிய ஆடியோவை காங்கிரஸ் தரப்பில் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்து, இதையும்  ஆதாரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியது. இது தொடர்பாக தீர்ப்பின்போது கவனத்தில் கொள்வோம் என்று உச்சநீதி மன்றம் கூறி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாஜக,ஆபரேஷன் தாமரை என்ற பெயரில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்களுக்கு பதவி மற்றும் பணம் ஆசைக்காட்டி இழுத்து, ஆட்சியை கவிழச் செய்தது.

இதன் காரணமாக காங்கிரஸ் மற்றும் மஜதவை சேர்ந்த 17 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர். இதன் காரணமாக அவர்களை சபாநாயகர் கட்சித்தாவல் தடை சட்டப்படி தகுதி நீக்கி நடவடிக்கை எடுத்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து, தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையில், சமீபத்தில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா, ஹுப்ளியில்  பாஜக நிர்வாகிகள்  கூட்டத்தில் பேசிய போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள்தான் தமது அரசு அமைய உதவியதாகவும் இது பாஜக மூத்த தலைவர் அமித்ஷா  உதவினார் என்று கூறும் ஆடியோ வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சி சார்பில் வழக்கறிஞர் கபில்சிபல், உச்சநீதி மன்றத்தில், எடியூரப்பா பேசும் ஆடியோவையும் ஆதாரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணையைத் தொடர்ந்து, எடியூரப்பாவின் ஆடியோ பதிவு தொடர்பாக தற்போது எந்த உத்தரவையும் பிறப்பிக்கத் தேவையில்லை, தற்போது வழங்கப்பட்டுள்ள  கூடுதல் தகவல்களையும் நாங்கள் கவனத்தில் கொள்வோம்,  எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பை வழங்குவோம் என்று கூறி உள்ளனர்.