ஐதராபாத்:

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் வாம்சி சவுத்ரி (வயது 31). இவர் சென்னையை சேர்ந்த ஒரு பெண்ணுடன் போனில் பேசி பழகியுள்ளார். இருவரும் மும்பை மற்றும் கோவாவுக்கு பயணம் மேற்கொள்ள முடிவு செய்தனர். ஆனால், விமான டிக்கெட் எடுக்கவும், பயண செலவுக்கும் வாம்சியிடம் பணம் இல்லை.

தனது பண கஷ்டத்தை அந்த பெண்ணிடம் சொல்லவும் வாம்சிக்கு மனம் இடம் கொடுக்கவில்லை. இதனால் அவர் ஒரு திட்டம் போட்டார். மும்பை, சென்னை, ஐதராபாத் ஆகிய மூன்று மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகங்களுக்கு ஒரு போலி மெயில் கணக்கில் இருந்து தகவல் அனுப்பினார்.

ஏப்ரல் 16ம் தேதி அன்று இந்த 3 நகரில் உள்ள விமானநிலையங்களில் இருந்து விமானங்கள் கடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். இதை கண்ட போலீசார் விமானநிலையங்களுக்கு எச்சரிக்கை விடுத்து தீவிர சோதனை நடத்தினர். இது தொடர்பான செய்திகளும் வெளியானது.

இந்த காரணத்தை காட்டி விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று அந்த பெண்ணிடம் வாம்சி கூறினார். முன்னதாக ஏப்ரல் 16ம் தேதியிட்ட ஒரு போலி விமான டிக்கெட்டை தயார் செய்து அதை அந்த பெண்ணுக்கும் மெயில் அனுப்பியிருந்தார். இதனால் வாம்சி திட்டமிட்டபடி பயணத்தை ரத்து செய்துவிட்டார். தனது பண கஷ்டமும் அந்த பெண்ணுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டார்.

பின்னர் போலீசார் விமான கடத்தல் மிரட்டல் போலி என்று கண்டுபிடித்தனர். தகவல் வந்த மெயில் கணக்கை கண்டுபிடிக்கும் பணியில் சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டனர். இறுதியில் ஐதரபாத்தில் உள்ள பிரவுசிங் சென்டரில் இருந்து அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது.

அங்குள்ள சிசிடிவி கேமரா மூலம் குறிப்பிட்ட கம்ப்யூட்டரை பயன்படுத்தியவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் வாம்சி சிக்கினார். உண்மையை ஒப்பக் கொண்டார். அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் ஏற்கனவே இணையதள திருமண தகவல் மையம் மூலம் ஒரு பெண்ணை தொடர்பு கொண்டு திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூ. 6 லட்சம் மோசடி செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.