உலகின் மிகப் பழமையான பாசன அமைப்புகளில் ஒன்றான இரண்டாம் நூற்றாண்டில் சோழ மன்னன் கரிகாலனால் கட்டப்பட்ட கல்லணை, மற்றும் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய வீராணம் ஏரி தவிர ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள காலிங்கராயன் அணைக்கட்டு ஆகிய தமிழ்நாட்டின் மூன்று கட்டுமானங்களுக்கு உலக பாரம்பரிய அடையாளம் வழங்கப்பட்டுள்ளது.

நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறையில் புகழ்பெற்ற அமைப்பான சர்வதேச நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் ஆணையம் (ஐசிஐடி – ICID), யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய தளங்களின் வரிசையில் இந்த நீர்ப்பாசன கட்டமைப்புகளை அங்கீகரித்துள்ளது.

2021 ம் ஆண்டுக்கான உலக பாரம்பரிய நீர்ப்பாசன அமைப்பு என்ற பெருமையை பெற்றுள்ள இந்த மூன்று கட்டுமானங்களும் இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் ஏழாவது இந்திய நீர் வாரத்தின் போது விருதுகள் வழங்கப்பட உள்ளது.

செயல்பாட்டில் உள்ள பழமையான நீர்ப்பாசன கட்டமைப்புகள் மற்றும் ஆவண மதீப்பீடுகளைக் கொண்டு பல்வேறு தேசிய குழுக்களிடம் இருந்து பெறப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில் இந்த வருடாந்திர அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

பேச்சிப்பாறை அணை, மதுராந்தகம் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி உள்ளிட்ட ஆறு பாசன கட்டமைப்புகளை பரிந்துரை செய்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் நீர்வளத்துறை விண்ணப்பித்திருந்த நிலையில் டிசம்பர் மாதம் ஐசிஐடி மேற்கொண்ட நேரடி ஆய்வின் அடிப்படையில் கல்லணை, வீராணம், காலிங்கராயன் அணை ஆகிய மூன்று கட்டுமானங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஒரு ஆண்டுக்கு ஒரு நாட்டிற்கு அதிகபட்சமாக நான்கு விருதுகள் வழங்கப்படும் நிலையில் 2021 ம் ஆண்டிற்கான இந்த தேர்வில் தமிழ்நாட்டின் இந்த மூன்று நீர்ப்பாசன கட்டுமானங்களைத் தவிர உத்தர பிரதேசத்தில் உள்ள துக்வான் வீர் என்ற பாசன அமைப்பும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

13.2 லட்சம் ஏக்கர் நிலத்திற்கு நீர்ப்பாசனம் செய்ய பயன்படும் கல்லணை, உலகின் நான்காவது பழமையான அணையாகும். 2000 ஆண்டுகளாக நீடிக்கும் இந்த கட்டுமானம் கல்லால் ஆனதாகும். காவிரி நீரை கால்வாய்கள் வழியாக தஞ்சாவூர் டெல்டா பகுதியின் குறுக்கே திருப்பி விடுவதற்காக காவிரி ஆற்றங்கரையில் செதுக்கப்படாத திடமான பாறைகளால் கட்டப்பட்ட இந்த அணை தொடக்கத்தில் 69,000 ஏக்கர் நிலத்திற்கு நீர்ப்பாசனம் செய்தது என்று கல்லணை குறித்து ஐசிஐடி இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.