டெல்லி: இந்தியாவில் தீவிர வறுமை வெகுவாக குறைந்துள்ளது என உலக வங்கியின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மக்களின் ஏழ்மை நிலை குறித்த ஆய்வறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது. இதில் 2011ம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை தீவிர ஏழ்மை 12 சதவிகிதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினசரி ஒருவர் 1.9 டாலர், அதாவது 145 ரூபாய்க்கு கீழான வருமானத்தில் வாழும் நிலை இருந்தால் அவர் அதீத ஏழ்மை  (தீவிர வறுமை) நிலையில் இருக்கிறார் என்பது உலக வங்கியின் வரையறை. மக்களை அதீத ஏழ்மை நிலையிலிருந்து இந்தியா ஏறக்குறைய மீட்டு விட்டது ஐஎம்எஃப் ஆய்வறிக்கை அண்மையில் கூறியிருந்தது. இதையடுத்து உலக வங்கியும் இந்தியாவில் வறுமை குறைந்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியாகி உள்ள அறிக்கையில், இந்தியாவில், கடந்த 2011ம் ஆண்டு 22.5 சதவிகிதம் பேர் தீவிர வறுமையில்  வாடிய நிலையில் 2019ல் அது 10.2 சதவிகிதம் ஆக குறைந்து உள்ளது என்றுகூறியுள்ளது. இந்தியாவில் வறுமை நிலை  கிராமங்களில் அதிகமாக குறைந்து வருவதாக தெரிவித்துள்ளதுடன்,   2011இல் கிராமங்களில் 26.3 சதவிகிதம் பேர் வறுமையில் வாடிய நிலையில் 2019இல் 11.6 சதவிகிதமாக குறைந்துள்ளதாக கூறியுள்ளது. அதேவேளையில், நகரப்பகுதிகளில் 14.2 சதவிகிதமாக இருந்த வறுமை 6.3 சதவிகிதமாக குறைந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள கிராமப்புற பகுதிகளில், வறுமை குறையும் வேகம் நகர்ப்புறங்களைக் காட்டிலும் வியத்தகு முறையில் உள்ளது என்று உலக வங்கியின்  அறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த 2016 பணமதிப்பிழப்பு ஆண்டில் நகர்ப்புற வறுமை 2 சதவீத புள்ளிகளால் அதிகரித்தது மற்றும் 2019 இல் கிராமப்புற வறுமை 10 அடிப்படை புள்ளிகளால் உயர்ந்தது (கோவிட் அதற்கு முன்பு ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையுடன் ஒத்துப்போகிறது) என்று அந்த ஆய்வறிக்கை காட்டுகிறது.

பொருளாதார வல்லுநர்கள் சுர்ஜித் பல்லா, கரண் பாசின் மற்றும் அரவிந்த் விர்மானி ஆகியோரால் எழுதப்பட்ட IMF பணிக் கட்டுரை, 2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் தீவிர வறுமை 0.8% ஆகக் குறைவாக இருப்பதாகவும், தொற்றுநோய் இருந்தபோதிலும், உணவை நாடுவதன் மூலம் 2020 ஆம் ஆண்டில் அதை அந்த மட்டத்தில் வைத்திருக்க முடிந்தது என்றும் பரிந்துரைத்தது. வறுமை ஒழிப்பில் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா  திட்டம் பெரும் பங்காற்றியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது..