மதுரை:
மைச்சர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது காலணி வீசிய விவகாரத்தில் 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த உசிலம்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லெட்சுமணன் உடல் மதுரைக்கு கொண்டு வரப்பட்டு அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக லெட்சுமணன் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் தமிழத அரசு சார்பில் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ஆட்சியர் அனிஷ்சேகர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

அப்போது அமைச்சருக்கும், அங்கு அஞ்சலி செலுத்த வந்திருந்த பாஜக மாவட்ட தலைவர் சரவணன் மற்றும் நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ராணுவ வீரர் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு அமைச்சர் சென்ற போது விமானநிலையத்துக்கு வெளியே நின்றிருந்த பாஜகவினர் அமைச்சர் கார் மீது காலணியை வீசினர். அமைச்சரின் காரை கைகளாலும், கொடிக்கம்புகளாலும் தாக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக பாஜகவினர் 7 பேரை அவனியாபுரம் போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில், அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது காலணி வீசிய விவகாரத்தில் பாஜக மகளிர் அணியை சேர்ந்த சரண்யா, தனலட்சுமி மற்றும் தெய்வானை என்ற 3 பெண்களை கைது செய்து தனிப்படை காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கெனவே, 7 பேர் கைதான நிலையில், மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.