லக்னோ,

உத்தரபிரதேசத்தில் பாஜக முக்கியப் பிரமுகர் ஒருவர் தொண்டர்களுடன் பெண் அதிகாரியின் படுக்கை அறைக்குள் அத்துமீறி நுழைந்தார்.

இதையடுத்து அம்மாநில அமைச்சர், “சிலநேரங்களில் தொண்டர்கள் உற்சாகமடைந்து இப்படி நடந்துகொள்வது  சகஜம்தான்” என்று நியாயப்படுத்திப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

உத்தரபிரதேசத்தில் மஹோபா மாவட்டத்தில் பிளாக் டெவலப்மெண்ட் அதிகாரியாக பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவர் வீட்டில் இருந்தபோது அப்பகுதியின் பாஜக வின் முக்கியப் பிரமுகர் ஒருவர், கட்சித் தொணடர்களுடன் அந்தப் பெண் அதிகாரியின் படுக்கை அறைக்குள் அதிரடியாக நுழைந்திருக்கிறார்.

இச்சம்பவத்தால் மனதளவில் மிகவும் பாதித்த அந்தப்பெண் அதிகாரி,  நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள அப்பகுதிக்கு வந்த மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் டாக்டர் மகேந்திர சிங்கிடம் நடந்தச் சம்பவத்தை முறையிட சென்றிருக்கிறார்.

அவர் அந்தப் பெண்ணை தனியே அழைத்து விசாரிக்காமல் கட்சித் தொண்டர்கள் முன்னிலையிலும் விசாரித்திருக்கிறார். அந்தப்பெண்ணின் புகார் குறித்து பதிலளித்த அமைச்சர், பாஜக தொண்டர்கள் பெண்ணிடம் தவறாக நடந்துகொள்ள மாட்டார்கள் என்றார்.

அதேநேரம் சிலநேரங்களில் கட்சித் தொண்டர்கள் உற்சாகமடைந்து இப்படிச் செயல்படுவது சகஜம்தான் என்றார்.

பெண்களுக்கு எதிரான ரோமியோக்கள் மீது அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட உத்தரபிரதேச முதலமைச்சரின் எல்லைக்குள்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

சம்பந்தப்பட்ட பெண்ணின் புகார் மீது முதலமைச்சர் ஆதித்யநாத் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்..