சென்னை

திருமணப் பதிவு நிலையத்தின் மூலம் திருமணம் செய்துக் கொள்வதாக பல ஆண்களிடம்  பணம்  பறித்த இளம் பெண் குடும்பத்தினருடன் கைது செய்யப் பட்டுள்ளார்.

ஜெர்மனியில் வசித்து வரும் பாலமுருகன் என்னும் இளைஞர் சென்னையை சேர்ந்தவர்.   இவர் திருமணத் தகவல் நிலையம் மூலம் சுருதி என்னும் கோவையைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்துள்ளார்.   அதையொட்டி அவருடன் இணையம் மூலம் பழகி வந்துள்ளார்.    கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் இந்த பழக்கம் தொடர்ந்துள்ளது.

திடீரென சுருதி தன் தாய்க்கு உடல்நிலை சீர் கெட்டுள்ளதாகக் கூறி உள்ளார்.   சிகிச்சைக்காக ரூ.45 லட்சம் தேவை என பாலமுருகனிடம் தெரிவித்துள்ளார்.   வருங்கால மனைவி என்பதால் பாலமுருகன் அந்தப் பணத்தை சுருதிக்கு கொடுத்துள்ளார்.   பணம் வாங்கிய பிறகு சுருதி இவரிடம் இருந்து தொடர்பில் இருந்து விலகி உள்ளார்.  பாலமுருகனுக்கு தாம் ஏமாற்றப்பட்டுள்ளது அப்போது தான் புரிந்துள்ளது.

பாலமுருகன் கோவை சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.   வழக்கை விசாரித்த காவல்துறையினர் சுருதி, அவருடைய தாய் சித்ரா, மற்றும் தந்தை என கருதப் படும் பிரசன்ன வெங்கடேசன் ஆகியோரை பி. என். பாளையத்தில் கைது செய்துள்ளனர்.  விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சுருதி திருமண தகவல் இணைய தளத்தில் பதிவு செய்த பின் அங்குள்ள இளைஞர்களின் தகுதி, மற்றும் பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப தனது பக்கத்தில் தகவல்களை மாற்றிக் கொள்வார்.  அதன் பின் அந்த இளைஞர்களை ஏமாற்றி சுமார் 3 மாதங்கள் வரை பழகுவார்.   தனது தாயாருக்கு புற்று நோய் அல்லது மூளைக்கட்டி என பெரிய நோயைக் கூறி பணம் பறித்து அதன் பின் தொடர்பை துண்டித்துக் கொள்வார்.

சுருதி இதுபோல கடந்த ஒரு வருடம் முன்பு நாமக்கல், சேலம், நாகப்பட்டினம் உட்பட பல மாவட்டங்களில்  உள்ள பல இளைஞர்களிடம் இருந்து எக்கச்சக்கமாக பணம் ஏமாற்றி உள்ளார்.    சுருதி மற்றும் உள்ள் ஐருவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.