சென்னை: பிளஸ் 2 முடித்து 8,588 மாணவர்கள் எவ்வித உயர்கல்விக்கும் விண்ணப்பிக்கவில்லை என்பதால், உயர்கல்வி தொடராத மாணவர்களின் விவரங்களை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு மாணவரையும் தொடர்புகொண்டு வழிகாட்டுதல்கள் வழங்க திட்டம் தீட்டப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் 12ம் வகுப்பு முடித்துவிட்டு மேற்படிப்பு செல்லாத மாணவர்களின் பட்டியலை பள்ளிக்கல்வித்துறை தயார் செய்து வருகிறது. 2021-22ம் கல்வி ஆண்டில்  +2 முடித்த 79,762 பேரில் 8,588 பேர் உயர்கல்வி பயில விண்ணப்பிக்கவில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து உள்ளது.  தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடந்தது. ஜூன் மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் டிகிரி, டிப்ளமோ படிப்புகளில் சேர்ந்து படித்து வருகின்றனர். தேர்ச்சியடையாத மாணவர்களும் மறுதேர்வு எழுதி மேற்படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.

அவர்களின் விவரங்களை அனுப்ப பள்ளிகளுக்கு,  பள்ளிக்கல்வித்துறை உத்தரவு அளித்துள்ளது. ஒவ்வொரு மாணவரையும் தொடர்பு கொண்டு ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.